தெய்வநாதேஸ்வரர் திருக்கோவில், இலம்பையங்கோட்டூர்
சிவஸ்தலம் பெயர்: இலம்பையங்கோட்டூர் (தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்: தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர்
இறைவி பெயர்: கனக குசாம்பிகை, கோடேந்து முலையம்மை
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1
தெய்வநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
அருகில் உள்ள பெரிய ஊர் திருவள்ளூர். திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.
செல்லும் வழிகள்
1. ரயில் வழி: சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.
2. காஞ்சிபுரத்தில் இருந்து: காஞ்சிபுரத்தில் இருந்து 'செல்லம்பட்டிடை' செல்லும் நகரப் பேருந்தில் சென்று, செல்லம்பட்டிடையில் இறங்கினால் அங்கிருந்து 1 கி.மீ-ல் உள்ள இத்திருக்கோயிலை அடையலாம்.
3. பேரம்பாக்கம் வழி: இந்த ஆலயம் செல்வதற்கு பேருந்து வசதிகள் பேரம்பாக்கத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உள்ளது. ஷேர் ஆட்டோ வசதிகள் அருகில் உள்ள நரசிங்கபுரம் வரை மட்டும் உள்ளது.
குறிப்பு
ஊரில் உணவகம், பூஜை பொருட்கள் வாங்கும் கடை வசதிகள் எதுவுமில்லை.
ஆலய முகவரி
எலுமியன்கோட்டூர்
கப்பாங்காட்டூர் அஞ்சல்
வழி எடையார்பாக்கம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631553
97157 10192
கோவில் நேரம்
காலை: 8:00 AM - 12:00 PM
மாலை: 4:30 PM - 8:00 PM
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | கூவம் (திருவிற்கோலம்) - 7 கிமி | |
| 2 | திருவாலங்காடு - 20 கிமி | |
| 3 | திருவாலங்காடு, திருவிற்கோலம், இலம்பயங்கோட்டூர், தக்கோலம், திருமாற்பேறு ஆகிய தலங்களை இணைக்கும் வரைபடம் |
பரிகார தலம்
குரு தோஷ பரிகாரத் தலம், தெய்வநாதேஸ்வரர் கோவில், இலம்பையங்கோட்டூர்
தல வரலாறு
திரிபுர சம்ஹாரம்
திரிபுர சம்ஹாரத்தின் போது இறைவன் தேரேறி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம் தான் இத்தலம் என்று தல புராணம் கூறுகிறது.
தெய்வநாதேஸ்வரர் பெயர்க்காரணம்
தேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
அரம்பேஸ்வரர் பெயர்க்காரணம்
தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று.
இலம்பையங்கோட்டூர் பெயர்க்காரணம்
இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது.
திரிபுர சம்ஹாரம்
வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாகச் சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்ட இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகிப் புறப்பட்டார்.
இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களை சிவபெருமான் வெல்லப் போகிறார் என்ற நினைத்துக் கர்வம் கொண்டது தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்த தேவர்கள் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உயிர்மாற தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாற வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார். அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிபொடியாகப் போயின.
திரிபுர சம்ஹாரம் சம்பந்தப்பட்ட பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்:
ஞானசம்பந்தரை வரவழைத்தது
ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்த கூட வந்த அடியார்கள் அதை தெரிந்து கொள்ளவில்லை.
பினபு இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்து சம்பந்தர் எறி வந்த சிவிகையை முட்டியது. சீர்காழிப் பிள்ளையான சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் படி அதைத் தொடர்ந்து செல்ல இத்தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்து விட்டது. அப்போது தான் இறைவனே பசு உருவில் நேரில் வந்து இத்தலத்தைப் பற்றி உணர்த்தியதை சம்பந்தர் அறிந்தார். பின் இத்தலம் வந்த சம்பந்தரை இறைவனைப் பதிகம் பாடி வழிபட்டார்.
பதிகத்தில் குறிப்பு
தனது பதிகத்தின் 3-வது பாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்:
பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம் பண்டுவெங்கூற்றுதைத்து அடியவர்க்கருளும் காலனாம் எனதுரை தனதுரையாகக் கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய நீர்மலர்க் குவளைகள் தாதுவிண்டோங்கும் ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி என்எழில் கொள்வதியல்பே.
இத்தலத்துப் பதிகத்தில்தான் ஞானசம்பந்தர் "எனதுரை தனதுரையாக" என்ற தொடரை, பாடல் தொறும் அமைத்துப் பாடியுள்ளார்.
கோவில் அமைப்பு
முகப்பு வாயில்
இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை.
வெளிப் பிரகாரம்
வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
மூலவர் சந்நிதி
கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கு லிங்க உருவில் காட்சி தருகிறார். இத்தல இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும், மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது.
பிரகார சந்நிதிகள்
ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன.
அம்பாள் சந்நிதி
அம்பாள் கனககுசாம்பிகை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
கோஷ்ட மூர்த்தங்கள்
கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
யோக தட்சிணாமூர்த்தி
இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கணகளை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.
புனித தீர்த்தங்கள்
இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன.
சந்திரன் வழிபாடு
தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை திர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான்.
சிறப்பு அம்சங்கள்
சூரிய ஒளி விழும் நாட்கள்
வருடத்தில் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுவாமி மீது படுகின்றன.
குரு தோஷ பரிகாரம்
தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.
விழாக்கள்
குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு போன்றவை இக்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
மேலும் புகைப்படங்கள்