A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
ஆட்சீஸ்வரர் திருக்கோவில், அச்சிறுபாக்கம்

சிவஸ்தலம் பெயர்: அச்சிறுபாக்கம்

இறைவன் பெயர்: ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர்

இறைவி பெயர்: இளங்கிளி அம்மை, உமையாம்பிகை

பதிகம்: திருஞானசம்பந்தர் - 1

ஆட்சீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால் அச்சிறுபாக்கத்திற்கு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் சுமார் 4 கி.மீ. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.

மேல்மருவத்தூரில் இருந்து T12A மற்றும் T13 பேருந்துகள் அச்சிறுப்பாக்கம் நின்று செல்லும். தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் நோக்கி செல்லும் MEMU ரயில் அச்சிறுப்பாக்கம் நின்று செல்கிறது.

ஆலய முகவரி
அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 603301
கோவில் நேரம்

காலை: 6:30 AM - 12:00 PM
மாலை: 4:00 PM - 8:30 PM
தொடர்பு: சங்கர் குருக்கள்
98423 09534

வரைபடம்
பரிகார தலம்
கோவில் அமைப்பு
ஆட்சீஸ்வரர் சந்நிதி

இவ்வாலயம் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் வடக்கே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும். கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது.

உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர். தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது.

உமையாட்சீஸ்வரர் சந்நிதி

உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம். உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

திருமணக்கோலம்

தென்திசையை நேராக்க வந்த அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றார். அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்ட ஸ்தலங்கள் -

வெளிப் பிரகாரம் & தல விருட்சம்
கொன்றையடி ஈஸ்வரர்

ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விபரம் கேட்டான். முனிவரும் “அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன்” என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.

இளங்கிளி அம்மை

வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

அச்சுமுறி விநாயகர்

சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் அச்சுமுறி விநாயகர் என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். புதிய செயல்கள் தொடங்குவதற்கு முன் இவ்விநாயகரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு விநாயகர் துதி பாடி பிறகு தான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் எனபதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம். விநாயகர் துதியில் முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

திரிபுர சம்ஹாரம் சம்பந்தப்பட்ட சிவஸ்தலம்
திரிபுர சம்ஹாரம்

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாகச் சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்ட இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகிப் புறப்பட்டார்.

இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களை சிவபெருமான் வெல்லப் போகிறார் என்ற நினைத்துக் கர்வம் கொண்டது தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்த தேவர்கள் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உயிர்மாற தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாற வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார். அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிபொடியாகப் போயின.

திரிபுர சம்ஹாரம் சம்பந்தப்பட்ட பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்:

  1. திருவதிகை
  2. இலம்பையங்கோட்டூர்
  3. திருவிற்கோலம்
  4. அச்சிறுபாக்கம்
பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. பொன்றிரண் டன்ன புரிசடை புரள
மேலும் புகைப்படங்கள்