தல வரலாறு: ஒருமுறை மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவே சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனோ, இது சாத்தியப்படாது என சொல்லி ஒதுங்கிக் கொண்டார். விஷ்ணுவும் விடுவதாக இல்லை. சிவனை வேண்டி தவம் செய்ய தொடங்கினார். விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன் அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார். அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார். சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என்று எண்ணி, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்றபோது சம்பந்தர் தனது பதிகத்தைப் பாடி முடித்தார். எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். ஆனால் திருஞானசம்பந்தர் பாடலால் மகாவிஷ்ணுவிற்கு சிவசாரூபம் கிடைத்ததாகப் புராணங்கள் கூறும் பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
கோவில் அமைப்பு: ஆலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுர வாயிலின் வெளியே ஒருபுறம் துவார கணபதியும், மற்றொரு புறம் முருகப்பெருமானும் உள்ளனர்.
உள்ளே நுழைந்தால் விசாலமான இடம் உள்ளது. முன்னே சென்றால் நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. வலதுபுறம் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துத் தனிக்கோயிலாக விளங்குவது மேற்கு நோக்கிய மேற்றளிநாதர் சந்நிதியாகும். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, திருமால், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இடதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற கோலம். காஞ்சி மண்டலம் முழுமைக்கும் அம்பாள் காமாட்சியேயாதலின் இம்மூர்த்தம் பிற்காலப் பிரதிஷ்டையாகும். அடுத்து இடதுபுறம் நால்வர் சந்நிதி. இதுவம் ஒரு பிறகால பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது. கோபுர வாயிலைக்கடந்து உள்நுழைந்து பிராகார வலமாக வரும் போது செல்வ விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, காசிவிசுவநாதர், பைரவர் சந்நிதிகள் முதலியன உள்ளன.
திருமேற்றளீஸ்வரரே இவ்வாலயத்தில் பிரதான மூர்த்தியாவர். ஆயினும், கோவிலின் ராஜகோபுரமும், பிரதான வாசலும் ஓத உருகீஸ்வரருக்கே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடக்கிறது.
திருமேற்றளித் தெருவின் ஒரு கோடியில் மேற்றளீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்க. இத்தெருவின் மற்றொரு கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது. மிகச்சிறிய கோயில். ஞானசம்பந்தர் சந்நிதி மட்டுமே உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. இவரின் உற்சவத் திருமேனி வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது. இத்தெருவின் நடுவில் "உற்றுக்கேட்ட முத்தீசர்" ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் இத்தலம் வந்து பதிகம் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாக வரலாறு.