Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவாட்போக்கி (ரத்தினகிரி)
இறைவன் பெயர்வாட்போக்கி நாதர், இரத்தினகிரிநாதர்
இறைவி பெயர்கரும்பார்குழலி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது திருச்சி - கரூர் சாலையிலுள்ள குளித்தலை அடைந்து அங்கிருந்து தெற்கே மணப்பாறை செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் இரத்தினகிரி என்னும் இடத்தில் ஓரு மலையின் மீது இத்தலம் அமைந்திருக்கிறது. தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு ரத்னகீரீஸ்வரர் திருக்கோயில்
(வாட்போக்கி) ஐயர்மலை
சிவாயம் அஞ்சல்
(வழி) வைகநல்லூர்
திருச்சி மாவட்டம்
PIN - 639 124

இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tiruvatpokki route mapகுளித்தலையில் இருந்து வாட்போக்கி (அய்யர்மலை)
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், திருகடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருவாட்போக்கி (இரத்தினகிரி) தலத்தில் உள்ள இரத்தினகிரிநாதரை பகல் தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. இங்கு அகத்தியர் உச்சிக்கால வழிபாடு (மத்தியான தரிசனம்) பெற்றபடியால், இங்கே உச்சிக்கால வழிபாடு சிறந்தது என்பர்.

இரத்தினம் வேண்டிவந்த வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்து நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பி அதில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று சொன்னார். வேந்தன் எவ்வளவு முயன்றும் நீர்த்தொட்டியை காவிரி நீரால் நிரப்ப முடியவில்லை. கோபமுற்ற அரசன் அந்தணர் மீது கோபம் கொண்டு தன் வாளை ஓங்கி அந்தணரை வெட்ட முயன்றான். அந்தக் கணமே இறைவன் அவ்வாளைப் போக்கி மன்னன் முன் காட்சி கொடுத்து இரத்தினம் தந்த காரணத்தால் இத்தலம் வாட்போக்கி என்னும் பெயர் பெற்றதென்பர். மன்னனுக்கு இரத்தினம் கோடுத்து உதவியதால் இறைவன் இரத்தினகிரிநாதர் என்றும், மன்னன் வாளைப் போக்கியதால் வாட்போக்கி நாதர் என்றும் வழங்கப்படுகிறார். இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டுப்பட்ட வடுவைக் காணலாம்

இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி கிழக்கு நோக்கியும் அருட்காட்சி தருகின்றனர். மூலவர் அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் (திருவாட்போக்கி - சிவபெருமான்) சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஈசனுக்கு மலைக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் என்ற திருப்பெயர்களும் உண்டு. ஆலயம் ஓரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக் கோவிலும், அதன் பிரகாரங்களும் பிரணவ வடிவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு சிவாயமலை என்ற பெயரும் உண்டு. தலவிருட்சம் வேப்பமரம். இந்திரனால் உண்டாக்கப்பட்ட சிறப்புடையது. இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர் முதலியோர் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.

ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் நடந்த போரில் வாயுதேவன் மேரு மலையிலிருந்து பெயர்த்து எடுத்த ஒரு முடியே இத்தலம். இந்திரன், சூரியன், உரோமேச முனிவர், ஆதிசேஷன், துர்க்கை, அகத்தியர், சப்த கன்னியர் ஆகியோர் பூஜித்த இத்தலத்தில் மலைமேல் உள்ள கோவிலை அடைய சுமார் 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும். மேலேறிச் செல்வதற்கு வசதியாக படிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. இம்மலைக்கோயிலை அடைவதற்குச் சாதனமாகவுள்ள படிக்கட்டு கி.பி. 1783 -இல் அமைக்கப்பட்டது. 952 படிகள் உள்ளன. ஏறும் வழியில் அங்கங்கே 4 கால் மண்டபங்களும் இருப்பதால் அவ்வப்போது களைப்பாறி மலை ஏறலாம். அடிவாரத்திலுள்ள பிராதன விநாயகரைத் தரிசித்து ஏறத் தொடங்கவேண்டும். அடிவாரத்தில் நால்வர் சந்நிதிகள், அலங்கார வளைவுள்ளது. படிகள் ஏறத் தொடங்கும் போது ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது. அவரையும் வணங்கிவிட்டு மலை ஏறலாம். சுமார் 75 படிகள் ஏறியவுடன் "பொன்னிடும் பாறை" என்ற சந்நிதி உள்ளது. 750 படிகளைத் தாண்டிய பின்பு "உகந்தாம் படி" வருகிறது. இங்கு விநாயகர் சந்நிதியும், கிழக்கு நோக்கியுள்ள அம்பாள் சுரும்பார்குழலி சந்நிதியும் உள்ளன. அவற்றை வலமாக வந்து மேலேறிச் சென்றால் வாட்போக்கிநாதர் சந்நிதியை அடையலாம். கோயிலினுள் நுழையும்போது நம்மை முதலில் வரவேற்பது தட்சிணாமூர்த்தி சந்நிதிதான். தரிசித்து உள்ளே நுழைந்தால் மேற்கு நோக்கி உள்ள இரத்தினகிரிநாதர் தரிசனம் கிட்டுகிறது. சிவராத்திரி நாட்களில் அல்லது முன்பின் நாட்களில் சூரிய ஒளி சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது. கோயில் உள்ளே நடராஜர், சிவகாமி சந்நிதிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், வைரப்பெருமாள் சந்நிதியும் உள்ளன. இத்தல இறைவன் ரத்தினகிரீஸ்வரருக்கு நாள் தோறும் அருகிலுள்ள காவிரி ஆற்றிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது.

இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் இறைவன் ஆணையில் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச்செய்தி. “காகம் அணுகாமலை” என்பர். இதை உறுதிப் படுத்துவது போல் இந்த மலையின் உச்சியில் காகம் பறப்பதில்லை.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே இடி பூஜை தடைபெறுகிறது. ஆயினும் ஆலயத்திற்கோ, அதிலுள்ள சிலா மூர்த்தங்களுக்கோ எந்தவொரு பாதகமும் ஏற்படுவதில்லை.

அப்பர் பாடியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. உயிரைப் பறிக்க வரும் எமதூதர்கள் நாம் யாராக இருந்தாலும் அதற்காக தங்கள் கடமையை தவறுவதில்லை, அவர்கள் வரும் சமயம் கதறிப் புலம்பி பயன் இல்லை. அவர்கள் வந்து நம் உடல் வேறு உயிர் வேறு எடுப்பதன் முன்பே வாட்போக்கி இறைவனை தொழுது நம் வினைகள் தீர வேண்டினால், இராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் நம் எல்லோரையும் காப்பார் என்று திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் நமக்கு தெரிவிக்கிறார். எம்பயம் நீங்க இத்தல இறைவனை இப்பதிகம் பாடி தொழுதல் நன்று

வாட்போக்கி நாதர் ஆலயம் புகைப்படங்கள்
திருவாட்போக்கி மலை தோற்றம்
திருவாட்போக்கி மலை மற்றொரு தோற்றம்
மலை அடிவார மண்டபம்
ஆஞ்சனேயர் சந்நிதி
பொன்னிடும் பாறை சந்நிதி
மலை ஏற படிகள், 4 கால் மண்டபம்
மலை ஏற படிகள், நுழை வாயில்
உட்பிரகாரத்தில் சிலா மூர்த்தங்கள்
நந்தியெம் பெருமான்
இறைவன் சந்நிதி கொடிமரம்
மலை மீது ஆலயம்
அம்பாள் சந்நிதி விமானம்