தல வரலாறு - எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. மேலும் வான்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு "திருப்புத்தூர்" என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.
பைரவர் சந்நிதி - இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் "யோக பைரவர்" என்று அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகின்றது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.
யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். கோயிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாக்க் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களூம் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
திருப்புகழ் தலம் - இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் 2-ம் பிரகாரத்தில் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கோண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
பாண்டிய மன்னர்கள் பலரும் இத்தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர். மருதுபாண்டியர்களால் ஆராதிக்கப் பெற்ற தலம். பல்வேறு கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் கொன்றை. தீர்த்தங்கள் திருத்தளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்.