Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கோடியக்கரை
இறைவன் பெயர்அமிர்தகடேசுவரர்
இறைவி பெயர்மையார் தடங்கன்னி, அஞ்சனாட்சி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவதுவேதாரண்யத்தில் இருந்து தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. குழகர்கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கி அமிர்தகடேசுவரர் ஆலயத்திற்கு செல்லலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவில்
கோடியக்கரை அஞ்சல்
வழி வேதாரண்யம்
வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN 614821

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Kodikkarai route map

வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தேவர்களும் அசுரர்களும் பாற்க்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தை பருகிய பிறகு மீதமுள்ள பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அவர் அதை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாக செல்கையில் அசுரர்கள் வாயுவிடமிருந்து அமுத கலசத்தை கைப்பற்ற முனைந்தனர். வாயுதேவன் முருகனை மனதால் வணங்கி அமுத கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக் கொண்டார். அமுத கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிரகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம் ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால் இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன.

இவ்வாலயத்தில் மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுத கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுத கலசத்துடன் உள்ள முருகப் பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலம் குழகர்கோவில் என்றும் வழங்குகிறது.

கோவில் அமைப்பு : இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், அதையடுத்து 16 கால் முன் மண்டபமும் உள்ளது. மண்டபம் கடந்து நேரே மூலவர் அமிர்தகடேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கு சுயம்பு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இறைவி மையார் தடங்கன்னி சந்நிதி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக காடுகிழாள் என்ற் அம்பிகையின் சந்நிதியும் முன் மண்டபத்திலுள்ளது. இத்தல இறைவனை பிரம்மா, நாரதர், இந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

ஆலய தீர்த்தம் ருத்ர தீர்த்தம் எனப்படும் இங்குள்ள கடல் ஆகும். இக்கோடிக்கரைக் கடலில் ஒருமுறை நீராடினால் சேதுவில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அகத்தியான்பள்ளியில் இருந்து இத்தலத்திற்கு வரும் வழியில் இராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் இராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர் கடலருகே கோவில் தனித்திருப்பதைப் பார்தது உள்ளம் வருந்தி பாடினார்.

Top
அமிர்தகடேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
7 நிலை இராஜகோபுரம்
காடுகிழாள் சந்நிதி
அமிர்தகர சுப்பிரமணியர் சந்நிதி
அமிர்தகர சுப்பிரமணியர்
அமிர்தகடேசுவரர் சந்நிதி
மையார் தடங்கண்ணி சந்நிதி
கோபுர வாயில் கடந்து உள் தோற்றம்
சுவாமி கருவறை கோபுரம்