தீவினைகள், திருமண தடை நீங்க, அகத்தீஸ்வரர் கோவில், அகத்தியான் பள்ளி
மேலும் படிக்க...தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | அகத்தியான்பள்ளி |
இறைவன் பெயர் | அகத்தீஸ்வரர் |
இறைவி பெயர் | பாகம்பிரியாள், மங்கைநாயகி அம்மை, சௌந்தரநாயகி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நகரப் பேருந்து வசதிகள் வேதாரண்யத்தில் இருந்து இருக்கிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் அகத்தியான்பள்ளி அகத்தியான்பள்ளி அஞ்சல் வழி வேதாரண்யம் வேதாரண்யம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN 614810 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
வேதாரண்யத்தில் இருந்து அகத்தியான்பள்ளி
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வரலானார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை அருகிலுள்ள திருமறைக்காடு தலத்தில் காட்டி அருள் புரிந்தார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.
கோவில் அமைப்பு: மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலிலும் அகஸ்தியர் கோவில் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு ஒரு தோரண வாயிலும் அதையடுத்து ஒரு 3 நிலை இராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும் இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிறபமாக காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.
இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது.
இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. இத்தல இறைவனை எமதர்மன் வழிபட்டுள்ளான். தல விருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக கோயிலின் மேற்புறம் உள்ள அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னிதீர்த்தம் ( அருகாமையில் உள்ள கடல்) உள்ளன.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தலத்தை வழிபட்டாலும் நினைத்தாலும் தீவினை நீங்கும் என்ற பெருமை வாய்ந்த இத்தலத்தை ஒருமுறையேனும் சென்று வழிபடுங்கள்.
Top