தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்கொள்ளம்புதூர் (தற்போது திருக்களம்புதூர், திருக்களம்பூர் என்ற பெயர்களில் வழங்கப்படுகிறது) |
இறைவன் பெயர் | வில்வவனேசுவரர் |
இறைவி பெயர் | சௌந்தராம்பிகை |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக கொரடாச்சேரி செல்லும் சாலை வழியில் தெற்கே சுமார் 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கொரடாச்சேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் திருக்களம்பூர் திருக்களம்பூர் அஞ்சல் திருவாரூர் மாவட்டம் PIN - 622414 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கும்பகோணத்தில் இருந்து திருக்கொள்ளம்புதூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்
1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.
3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும்போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.
கோவில் அமைப்பு: ஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான முற்றவெளியைக் காணலாம். வலதுபுறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இரண்டாவது வாயிலிலுள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரத்துள் நுழைய ஒரு மூன்று நிலை கோபுரம் உள்ளது. இதன் வழியே உள்ளே நுழைந்தால் நேரே அம்பாள் சந்நிதி உள்ளது.
5 நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் கண்டு மகிழலாம். உள் பிராகாரத்தில் வலம் வரும் போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உள்ளன.
வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.
அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். நேரே மூலவர் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
Top