தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருவெண்டுறை (தற்போது திருவண்டுதுறை என்று வழங்குகிறது) |
இறைவன் பெயர் | வெண்டுறைநாதர், மதுவனேஸ்வரர் |
இறைவி பெயர் | வேல்நெடுங்கண்ணி அம்மை, சத்யதாயதாக்ஷி, பிரஹதாம்பாள் |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | மன்னார்குடியில் இருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் வீராக்கி என்ற இடத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம். மன்னார்குடி - வீராக்கி செல்லும் நகரப் பேருந்துகள், மன்னார்குடி - சேந்தங்குடி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை வழியாகச் செல்கின்றன. |
ஆலய முகவரி | அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில் திருவண்டுதுறை திருவண்டுதுறை அஞ்சல் மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 614717 தொலைபேசி: 04367 294640 கீர்த்திவாச சிவாச்சாரியார் இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
மன்னார்குடியில் இருந்து திருவெண்டுறை செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
கோவில் வரலாறு: திருக்கயிலை முனிவர்களில் பெருமை மிக்கவரான பிருங்கி முனிவர் சிவபெருமானைத் தவிர வேறு தெய்வத்தை வணங்குதல் கூடாது என்ற வைராக்கியத்துடன் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அதையறிந்த சக்தி அம்முனிவரைத் திருத்துவதற்காக அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள உதிரம், சதை முதலிய கூறுகளை அகலச் செய்தாள். கால் தள்ளாடியதால் நிற்க முடியாத அந்நிலையிலும் பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபட்டார். இரக்கம் கோண்ட சிவபெருமான் முனிவருக்கு இன்னொரு காலைத் தந்து உதவினார். சக்தியும் சிவனை வேண்டி அவரது திருமேனியில் இடது பாகத்தைப் பெற்றார். அர்த்தநாரீஸ்வரர் ஆன சிவனும் சக்தியும் பிரித்தற்கரியவர் என்ற உணமையை உணராமல் பிருங்கி முனிவர் வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் திருமேனியில் ஒரு பாதியைத் துளைத்துக் கொண்டு சிவபெருமானை மட்டுமே வணங்கினார். உமையம்மை சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை - இவ்விரண்டையும் பிரித்துப் பார்த்தல் கூடாது என்ற உண்மையை முனிவருக்கு உணர்த்தி வண்டு உருவில் ஒரு சதுர்யுகம் எங்களை இணைத்து வழிபட்டுப் பாவம் நீங்குக என்றருள முனிவரும் உணமை உணர்ந்து அவ்வாறே இருவரையும் இவ்வாலயத்தில் வழிபட்டுப் பாவம் நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது.
பிரம்மனுக்கு படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டபொழுது இங்கு உமையொருபாகனாகிய சிவபெருமானை வழிபட்டு ஆணையும், பெண்ணையும் தடையின்றிப் படைக்கும் ஆற்றல் பெற்றான் என்று கூறப்படுகிறது.
சிவனும் சக்தியும் பிரித்தற்கரியவர் என்ற உணமையை உணராத மகாவிஷ்ணு மகப்பேறு வேண்டி சிவபெருமானை மட்டும் வழிபட்டு அழகிய மன்மதனை மகனாகப் பெற்றார். இதனால் கோபம் கொண்ட சக்தி மன்மதன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிந்து அழியுமாறு சாபமிட்டார். தவறை உணர்ந்த மகாவிஷ்ணு இவ்வாலயத்தில் விநாயகர், சோமஸ்கந்தர் ஆகியோரை வழிபட சக்தி சினம் தணிந்து இறக்கும் மன்மதன் மீண்டும் பிழைத்தெழுவான் என்று வரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு: பெரிய கோபுரம் உள்ள கிழக்கு நுழைவு வாயிலும், கோபுரம் இல்லாத மேற்கு நுழைவு வாயிலும் கொண்டு ஒரு பெரிய மதிற்சுவருடன் இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கணபதி சந்நிதியும், வடமேற்கு மூலையில் முருகப்பெருமானின் சந்நிதியும் உள்ளது. கருவறை முன் உள்ள நடு மண்டபத்தில் விநாயகரும், ஒரு நந்தியும், வடபுறம் தெற்குப் பார்த்த தனி சந்நிதியில் சோமஸ்கந்தர், நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் உள்ளனர். இறைவி வேல்நெடுங்கண்ணி அம்மைக்கு தனி விமானத்துடன் தெற்குப் பார்த்த தனி சந்நிதி உள்ளது.
இறைவன், இறைவி ஆகிய இருவரின் சந்நிதிகளையும் இணைக்கும்படி கருங்கல்லால் கட்டப்பெற்ற வேலைப்பாடு மிக்க தூணகளுடன் கூடிய அழகிய வெளி மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் தேவார மூவர், பிருங்கி முனிவர் ஆகியோரின் திருஉருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு தூணில் நான்கு யுகங்களைக் கண்ட ஆஞ்சநேயரும் உள்ளார். கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் காணப்படுகின்றனர். கிழக்கு வெளிப் பிரகாரத்திலுள்ள மண்டபத்தில் பைரவர், விசுவநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் ஆகியோரைக் காணலாம். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பிட்சாடணர் உருவச்சிலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.
அர்த்தநாரீஸ்வரர் திருமேனி விசேஷமானது. மாதொருபாகனின் வாகனத்தை உற்று நோக்கினால் இறைவன் உருவம் உள்ள பகுதியில் ரிஷப வாகனமாகவும், இறைவியின் உருவம் உள்ள பகுதியில் சிம்ம வாகனமாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.
ஆலயத்தின் உள்ளே தலமரமான வில்வ வருட்சம் உள்ளது. ஆலய தீர்த்தம் பிரம தீர்த்தம் ஆலயத்திற்கு வெளியே வடகிழக்கில் உள்ளது.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சிவபெருமான் யமனை உதைத்தது, திரிபுரம் எரித்தது, இராவணன் கயிலை மலையை எடுத்தது, திருமால் பிரம்மா அடிமுடி காண முடியாமல் அரிதாய் விளங்கியது முதலிய புராண வரலாறுகள் இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறைவனின் பெருமையைக் கூறி ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இறைவன் விரும்பும் இடம் திருவெண்டுறை என்று நிறைவு செய்கிறார்.
Top