தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருவெண்ணியூர் (தற்போது கோயில் வெண்ணி என்ற பெயரில் அறியப்படுகிறது) |
இறைவன் பெயர் | வெண்ணிக்கரும்பர், வெண்ணி நாதர், கரும்பேஸ்வரர் |
இறைவி பெயர் | அழகிய நாயகி, செளந்தர நாயகி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | தஞ்சாவூரில் இருந்து சாலியமங்கலம், அம்மாபேட்டை வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில் சாலியமங்கலத்தை அடுத்து வரும் கோயில் வெண்ணி நிறுத்தத்தில் இறங்கி பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒர் கிளைச் சாலையில் சுமார் 1 கி மீ. சென்று இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. நொலைவிலும் உள்ளது. பூஜைப் பொருட்கள் ஆலயத்தின் அருகில் கிடைப்பது அரிதானதால், அவற்றை அருகிலுள்ள பெரிய ஊரில் வாங்கிக் கொண்டு செல்வது நல்லது. |
ஆலய முகவரி | அருள்மிகு வெண்ணிக்கரும்பேஸ்வரர் திருக்கோயில் கோயில் வெண்ணி கோயில் வெண்ணி அஞ்சல் நீடாமங்கலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 614403 இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
நீடாமங்கலத்தில் இருந்து திருவெண்ணியூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
வெண்ணிப் போர்: தமிழக சரித்திரம் படித்தவர்கள் வெண்ணியில் நடந்த போரைப் பற்றி நன்கு அறிவார்கள். தன்னை எதிர்த்த சேர, சோழ மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து கரிகால் சோழன் இந்த வெண்ணியில் தான் போரிட்டு பெரும் வெற்றி கண்டான். இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கரிகால் சோழன் கரும்பேஸ்வர் ஆலயத்திற்கு பல திருப்பணிகள் செய்தான்.
கோவில் அமைப்பு: கிழக்கு திசையில் 3 நிலைகளை உடைய கோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்குப் பிரகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் கரும்பேஸ்வரர் சுயம்புலிங்க உருவில் காட்சி தருகிறார். சிவலிங்கத் திருமேனியின் பாணப் பகுதி ஒரு கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து கட்டியது போல் காணப்படுகிறது. கருவறைச் சுற்றுச் சுவரில் கோஷ்ட தெய்வங்களாக நடன விநாயகர், தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் செளந்தர நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்திற்கு வெளியே சூரிய, சந்திர தீர்த்தங்கள் உள்ளன. தல மரமாக நந்தியாவட்டை உள்ளது.
சர்க்கரை நோய்க்கு மருந்து: கரும்பில் இருந்து தான் சர்க்கரை எடுக்கப்படுகிறது. நமது உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோய் இன்று நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருவது மிகவும் அவசியம். கரும்புக் காடாக இருந்த இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றிய இத்தலத்து இறைவனையும், அம்பாள் செளந்தர நாயகியையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் விரைவில் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகங்கள் இரண்டும், ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன. சம்பந்தர் தனது பதிகத்தில் (இரண்டாம் திருமுறை) திருவெண்ணியூர் இறைவனை வணங்குபவர்களின் வினைகள் நீங்கும் என்றும், துன்பங்கள் அவர்களை அணுகாது என்றும், இப்பதிகத்தை தொடர்ந்து ஓதுபவர்கள் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர் என்றும் பலவாறு குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசரும் தனது பதிகத்தில் இதனையே குறிப்பிடுகிறார். 5-ம் திருமுறையில் உள்ள அவரின் பதிகத்தில் இத்தல இறைவனை தலைதாழ்த்தி வணங்குபவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்று குறிப்பிடுகிறார். சுந்தரர் தனது ஷேத்திரக் கோவைப் பதிகத்தில் (7-ம் திருமுறை, 47வது பதிகம், 5வது பாடல்) இத்தல இறைவனை "வெண்ணிக் கரும்பே" என்று குறிப்பிட்டுள்ளார்.
Top