Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பரிதிநியமம் (தற்போது பரிதியப்பர் கோவில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர்
இறைவி பெயர்மங்களநாயகி, மங்களாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவதுதஞ்சாவூரில் இருந்து ஓரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ள மேல உளூர் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ. சென்றால் இத்தலம் இருக்கிறது. தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில், பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்து செல்கிறது. ஓரத்தநாடுக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்
பருத்தியப்பர் கோயில்
மேலவுளூர் அஞ்சல்
தஞ்சாவூர் RMS
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614904

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
paruthiniyamam route map

தஞ்சாவூரில் இருந்து பரிதிநியமம் பரிதியப்பர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல், அவரை நிந்தனை செய்து தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டதால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டான். இத்தலத்தில் தான் சூரியனுக்கு ஏற்பட்ட தோஷம் விலகியது. மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம் சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார். பங்குனி மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படுகின்றன.

கிழக்கு நோக்கியுள்ள இந்த ஆலயம் இரண்டு கோபுரங்களுடன் விளங்குகிறது. இராஜகோபுரம் 5 நிலைகளையும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும் நேரே கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வசந்த மண்டபத்திற்குப் பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உட் பிரகாரம் அடைந்தால், அங்கு விநாயகர், முருகன், கஜலட்சுமி சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராச சபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.

துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உட்சென்றால் மூலவர் பரிதியப்பர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு எதிரில் நந்தி, பலிபீடம், அதையடுத்து மூலவரை நோக்கியபடி சூரியன் இருப்பதைக் காணலாம். சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன.

ஆலயத்திற்கு மூன்று தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும் சந்திரதீர்த்தம், வேத தீர்த்தம் கோவிலின் பின்புறமும் உள்ளன. தலமரம் அரசமரம்.

தலச் சிறப்பு: மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது ஆகும். அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள். எத்தகைய பிதுர் தோஷத்திற்கும் இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதக ரீதியாக எந்த கிரகத்தினாலும், பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும் இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்கண்டேயர் அருவ வடிவில் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் திருப்பரிதிநியமம் தலத்தை பலவாறு சிறப்பித்து தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார். வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்றும், பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்றும், பறையொலியும், சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப்பரிதிநியமம் என்றும், பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்றும், உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்றும், தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்றும் குறிப்பிடும் அவர், இப்பதிகத்தின் 10 பாடல்களையும் பாடி புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை, அவர்கட்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை என்று கூறுகிறார்.

Top
பரிதியப்பர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜகோபுரம்
முன் மண்டபம், பின்னால் 3 நிலை 2-வது கோபுரம்
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
சுப்பிரமணியர் சந்நிதி
மங்களாம்பிகை சந்நிதி
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
கொடி மரம், நந்தி மண்டபம்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
பாஸ்கரேஸ்வரர் சந்நிதி