தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருப்பூவனூர் |
இறைவன் பெயர் | புஷ்பவன நாதர், சதுரங்கவல்லபநாதர் |
இறைவி பெயர் | கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் மன்னார்குடியில் வடக்கே இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து தெற்கே சுமார் 4.5 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம். ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் உள்ளது. பாலத்தில் போகும்போது பார்த்தாலே கோபுர தரிசனம் கிட்டும். மன்னார்குடி - அம்மாப்பேட்டை, வலங்கைமான் - மன்னார்குடி நகரப் பேருந்துகள் பூவனூர் வழியாகச் செல்கின்றன. இவற்றில் வந்து பூவனூர் நிறுத்தத்தில் இறங்கிக் கோயிலை அடையலாம். |
ஆலய முகவரி | அருள்மிகு புஷ்பவன நாதர் திருக்கோயில் பூவனூர் பூவனூர் அஞ்சல் திருவாரூர் மாவட்டம் PIN - 612803 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
மன்னார்குடியில் இருந்து திருப்பூவனூர் சதுரங்கவல்லபநாதர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில் 147 அடி அகலம், 304 அடி நீளம் கொண்டதாகும். நீண்டு நெடிதுயர்ந்த மதிற்சுவரும் கருத்தைக் கவரும் கல்மண்டபங்களும் அகன்று விரிந்த உள்-வெளிப் பிரகாரங்களும் கலை நுணுக்கமுள்ள விமானங்களும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோவில் கொண்டிருக்கிறார்கள். உட்பிரகாரத்தில் புஷ்பவனநாதர் என்றும் சதுர்ங்கவல்லபநாதர் என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது. அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது.இந்தத் தலத்தில் கோவில் கொண்டுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். விஷ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கோவில் தீர்த்தத்தில் நீராடி சாமுண்டீஸ்வரி அம்மன் சந்நிதியில் வேர்கட்டிக்கொண்டு கடி நோய்களிலிருந்து விடுபடுகின்றனர். தர்மவர்மன் என்னும் அரசன் இக்கோவிலின் தீர்த்தத்தில் நீராடி தனது கரும்குஷ்டநோய் நீங்கபெற்றிருக்கிறான். நந்திதேவர் மற்றும் சித்தர்கள் பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். கருவறை கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, துர்க்கை, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆக்யோரின் சந்நிதிகள் அமையபெற்றுள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
தல வரலாறு: இத்தலத்தில் இறைவனுக்கு சதுரங்கவல்லபநாதர் என்ற பெயர் ஏற்பட ஒரு சுவையான வரலாறு உள்ளது. தெண்பாண்டி நாட்டு அரசன் வசுசேனன் அவன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு வெகு காலமாக குழந்தை இல்லை. நீண்ட நாட்களாக அவர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இறைவன் அவர்களுக்கு அருள முன்வந்தார். அரசன் ஒருநாள் நீராடிய குளத்தில் ஒரு தாமரை மலரில் ஒரு சங்கைக் கண்டான். இறைவன் திருவருளால் உமாதேவியே அவர்களுக்கு மகளாகப் பிறக்க அங்கு சங்கு ரூபத்தில் தென்பட அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான். சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டிதேவி அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வர ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ் பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற நோக்கில் மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான். பல அரசகுமாரர்கள் வந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் அவளிடம் தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டு, இறைவன் மீது பாரத்தைப் போட்டு தலயாத்திரை மகளுடன் கிளம்பிச் சென்றான். அநேக சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருப்பூவனூர் வந்து சேர்ந்தான். இறைவன் புஷ்பவனநாதரை வழிபட்டு கவலையுடன் தன் இருப்பிடம் திரும்பினான். மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் என்னை வெல்ல முடியுமா என்று கேட்டார். அரசன் மகளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது. அன்றுவரை இந்த ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள் அன்று அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள். அரசன் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு வயோதிகருக்கு தன் வாக்குப்படி மகளை மண்முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான். உள்ளம் உருக சிவபெருமானை தியானித்தான். கண் சிமிட்டும் நேரத்தில் அங்குள்ள முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான். சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியை வென்று அவளுக்கு மாலையிட்டவர் புஷ்பவனநாதரே ஆவார். சதுரங்க ஆட்டத்தில் இறைவியை வென்றதால் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயரும் பெற்றார்.
Top