தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | இராமனதீச்சுரம் |
இறைவன் பெயர் | இராமநாதசுவாமி, இராமலிங்கேஸ்வரர், இராமநாதேஸ்வரர், |
இறைவி பெயர் | கருவார்குழலி அம்மை, சூலிகாம்பாள், சரிவார்குழலி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கீ.மீ. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம். திருப்புகலூரில் இருந்து 2 கி.மி. தொலைவிலும், திருச்செங்காட்டங்குடி தலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. நன்னிலம், திருப்புகலூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. |
ஆலய முகவரி | நிர்வாக அதிகாரி அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் திருக்கண்ணபுரம் திருக்கண்ணபுரம் அஞ்சல் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 609704 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருப்புகலூரில் இருந்து இராமனதீச்சுரம்
இராமநாதேஸ்வரர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
கிழக்கு நோக்கிய இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை.ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. ஆலயத்திற்கு எதிரில் இராமதீர்த்தம் உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலீபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். இங்கு கொடிமரமில்லை. அதன்பின் விசாலமான முற்றவெளி உள்ளது. வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சரிவார்குழலி சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். வெளிச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறை உள்ள மண்டபத்தின் நுழைவாயில் மேல் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன், பார்வதி சுதைச் சிற்பத்தைக் காணலாம். உள்ளே கருவறையிலுள்ள் மூலவர் சிவலிங்கத் திருமேனி பெரியது. உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தீபாராதனையின்போது மூலவர் லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். கோஷ்டமூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் அதற்குரிய இடத்தில் அமைந்துள்ளது.
தல வரலாறு: ராமர், சீதையை மீட்க இலங்கை சென்ற போது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவ வழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே வரும்போது, ஒரு மரத்தின் அடியில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து காட்சி தந்ததாகவும், பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. ராமர் சிவ வழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி "ராமநாதசுவாமி" என்று பெயர் பெற்றார்.
இராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். இராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது. இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர் சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் இயற்றியுள்ள பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் அருள்மிகு சௌரிராசப் பெருமாள் கோயில் உள்ளது. இராமநாதேஸ்வரர் கோவில் இராமநாதசுவாமி தரிசனத்திற்குப் பிறகு இந்த வைஷ்ணவ தலத்தையும் தரிசியுங்கள்.
திருக்கண்ணபுரத்திற்கு பக்கத்தில் திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் முதலிய பாடல் பெற்ற திருமுறைத் தலங்களும் உள்ளன.