தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருபயற்றூர் (தற்போது திருப்பயத்தங்குடி என்று வழங்குகிறது) |
இறைவன் பெயர் | திருப்பயற்றுநாதர், முக்திபுரீஸ்வரர் |
இறைவி பெயர் | காவியங்கண்ணி அம்மை, நேத்ராம்பிகை |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
எப்படிப் போவது | திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர்ச் சாலையில் சென்றால் மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து சுமார் 15 கி.மீ.தொலைவிலுள்ள இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதி உள்ளது |
ஆலய முகவரி | நிர்வாக அதிகாரி அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோவில் திருப்பயத்தங்குடி திருப்பயத்தங்குடி அஞ்சல் வழி கங்களாஞ்சேரி நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 610101 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருவாரூரில் இருந்து திருபயத்தங்குடி செல்லும் வரைபடம்
Map courtesy by: Google Maps
தல வரலாறு: முன்னொரு காலத்தில் சிவபெருமானிடத்தே பேரன்பு கொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடல் மூலம் சரக்கை ஏற்றுமதி செய்ய கடல்துறை நோக்கி இத்தலத்தின்வழியே செல்லும்போது சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக்கண்டார். அந்நாளில் மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும் வழக்கம் இருந்தது. ஆனால் பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை. வணிகர் இத்தலத்தின் பெருமானையடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார். சிவ பக்தராகிய இவர் இத்தல சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி மறுநாள் காலை வணிகர் எழுந்து பார்த்த போது மிளகு மூட்டைகள் எல்லாம் பயறு மூட்டைகளாக மாறி இருப்பதைக் கண்டார். மகிழந்த வணிகர் நாகப்பட்டினம் நோக்கி பயணத்தை துவக்கினார். சுங்கச்சாவடி வந்தது. சுங்க அதிகாரிகள் அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். பயறு மூட்டைகளாக இருப்பதை அறிந்து வரி விதிக்காமல் அனுப்பி விட்டனர். சுங்கச்சாவடி கடந்த பின் பயறு மூட்டைகள் அனைத்தும் மிளகு மூட்டைகளாக மாறிவிட்டன. வணிகர் மிக்க இலாபம் பெற்றார். வணிகர் மிளகு விற்ற பணத்தில் கிடைத்த லாபத்தையெல்லாம் சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால் இத்தலம் "திருப்பயற்றூர்" எனவும், இறைவன் "திருப்பயற்றுநாதர்" எனவும் அழைக்கப்படுகிறார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகின்றது.
இத்தல கல்வெட்டு ஒன்றின்படி திருப்பயற்றூரில் வாழ்ந்து வந்த பஞ்சநதவாணன் என்பவன் கண் நோயால் வருந்திய போது, அவன் கண் நன்றாகும்படி இத்தல இறைவனை வேண்டிக் கொண்டு, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாயுள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர். ஆகையால் யாருக்கேனும் கண் நோய் இருப்பின், இத்தலத்தினை அடைந்து கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும், திருப்பயற்றுநாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகின்றது.
கோவில் அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் தனியே உள்ளது. வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.
இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கார்த்திகைச் சோமவார நாட்களில் சுவாமிக்கு விசேஷ ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இவ்வாலயத்திலுள்ள பெரிய மண்டபத்தில் உள்ள சோமாஸ்கந்தர் சந்நிதி மிகவும் சிறப்பாகவுள்ளது. பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். இவருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு துர்க்கை கிடையாது. வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 4-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
Top