தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருஅன்பில் ஆலாந்துறை (தற்போது அன்பில் என்று வழங்கப்படுகிறது) |
இறைவன் பெயர் | சத்யவாகீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் |
இறைவி பெயர் | சௌந்தர நாயகி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைஷ்ணவ 108 திவ்யதேசங்களில் ஒன்றான அன்பில் வடிவழகிய நம்பியின் ஆலயம் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. அன்பில் மாரியம்மன் கோவிலும் சிவாலயத்தில் இருந்து அருகில் உள்ளது. திருச்சி மற்றும் லால்குடியில் இருந்து அன்பில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. |
ஆலய முகவரி | அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில் அன்பில் அஞ்சல் லால்குடி வட்டம் திருச்சி மாவட்டம் PIN - 621702 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
லால்குடியில் இருந்து அன்பில் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
ஊரின் பெயர் அன்பில், கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆயிற்று. 5 நிலை இராஜகோபுரத்துடன் விளங்கும் இத்தலத்தில் மூலவர் சத்யவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மா வழிபட்ட மூர்த்தம் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமமும் உண்டு. கோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர். ஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது கொள்ளிட ந்தியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தரால் கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இவ்வாலயத்தில் காட்சி தருகிறது. பார்த்து இன்புற வேண்டிய சிற்பம். காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
அன்பில் ஊர் சிறியதே என்றாலும் நல்ல சரித்திரப் பிரசித்தி உடைய ஊர். அன்பில் கிராமத்தில் புதை பொருளாகக் கிடைத்த செப்பேடுகள் சோழ மன்னனது சரித்திரத்தையே உருவாக்க மிகவும் உதவியிருக்கிறது. இந்த ஊரில் பிறந்த அநிருத்தர் என்பவர் முதல் பராந்தக சோழனின் அமைச்சராக இருந்து புகழ்பெற்றவர். அநிருத்த பிரம்மராயர் என்று எல்லோராலும் பாராட்டப் பெற்றவர்.