Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமாந்துறை
இறைவன் பெயர்ஆம்ரவனேஸ்வரர்
இறைவி பெயர்அழகால் உயர்ந்த அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடி அடைவதற்கு முன்னால் 3 கி.மீ. தொலைவில் திருமாந்துறை சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்
மாந்துறை அஞ்சல்
லால்குடி S.O.
லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
PIN - 621703

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirumandurai mapதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாந்துறை செல்லும் வழி வரைபடம்
Map by: Google Map

ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று பெயர் பெற்றது. இந்த தலம் வடகரை மாந்துறை என்றழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலுள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியிலுள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது. தென்கரை மாந்துறை ஒரு தேவார வைப்புத்தலம்.

கோவில் ஒரு கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் மிருகண்டு முனிவர் இறைவனை வழிபடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம். பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், இலக்குமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி தருகின்றன. நால்வருள், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்கின்றார். நவக்கிரக சந்நிதியில் இங்கு சூரியன் தனது இரு மனைவிகளுடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது. அம்பாள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோம வாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.

திருப்புகழ் தலம்: மேற்குப் பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் உள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

தலச் சிறப்பு: திருவண்ணாமலையில் சிவபெருமான் முடியைக் கண்டதாக பொய் கூறிய பிரம்மா, தான் பெற்ற சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டார். சூரியனுடைய மனைவி சம்யாதேவி தன் கணவனின் உக்கிரமான ஒளியைப் பெறுத்துக் கொள்ள முடியாமல் இத்தலத்தில் தவமிருந்து சூரிய ஒளியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றாள். கெளதம முனிவரின் மனைவி அகலிகையை தீண்டியதால் இந்திரனை கெளதம முனிவர் சாபமிட்டார். இந்திரன் தன்னுடைய சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டான். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் உண்டான தோஷம் நீங்க சூரியன் வழிபட்டு பயன் அடைந்த தலம்.

தலவரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள். கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை" என வழங்கப்படுகிறது.

மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

Top
ஆம்ரவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் 3 நிலை கோபுரம்
வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்
நவக்கிரக சந்நிதி
மூலவர் சந்நிதி செல்லும் வாயில்
இறைவி சந்நிதி விமானம்
இறைவன் சந்நிதி விமானம்
Amravaneswarar
மூலவர் ஆம்ரவனேஸ்வரர்