தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்கானூர் |
இறைவன் பெயர் | செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர் |
இறைவி பெயர் | சிவலோக நாயகி, சௌந்தரநாயகி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 6.5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள விஷ்ணம்பேட்டை அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். விஷ்ணம்பேட்டை வரை நல்ல சாலை வசதி இருக்கிறது. அதன் பிறகு திருக்கானூர் கோவில் வரை மண் சாலை தான் உள்ளது. ஆட்டோ, கார் மூலம் இத்தலத்திற்கு செல்வது தான் சிறந்தது. மண் சாலையில் பேருந்து செல்ல வசதியில்லை. கொள்ளிடக் கரையில் கோயில் மட்டும் தனியே உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோவில் திருக்கானூர் விஷ்ணம்பேட்டை அஞ்சல் வழி திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613105 ஆலய தொடர்புக்கு: விவேக் குருக்கள், கைபேசி: 97919 98358 |
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருக்கானூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
ஆலயத்தின் குருக்கள் திருக்காட்டுபள்ளியில் வசிக்கிறார். அங்கிருந்து அவருக்கு வசதிப்பட்ட நேரத்தில் திருக்கானூர் வந்து தினசரி ஒரு வேளை பூஜை மட்டும் செய்துவிட்டுச் செல்கிறார். எனவே திருக்கானூர் செம்மேனிநாதரை தரிசிக்க செல்பவர்கள் திருக்காட்டுப்பளியில் குருக்களை சந்தித்து அவரை கூட்டிக் கொண்டு ஆலயம் செல்வது தான் சிறந்தது. ஒருத்தராக செல்வதை விட 4, 5 பேர்களாக சேர்ந்து செல்வது நல்லது. மண் சாலையில் தனி நபராக செல்வது உசிதமில்லை. மாலை இருட்டிய பிறகும் செல்வது உசிதமில்லை.
கிழக்கு நோக்கிய சிறிய 3 நிலை ராஜகோபுரத்துடன் சுற்றிலும் மதிற்சுவருடன் இவ்வாலயம் விளங்குகிறது. ஆலயம் நல்ல நிலையிலுள்ளது. . பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர், மகாவிஷ்ணு, ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். உள் பிரகாரம் விசாலமாக உள்ளது. மூலவர் செம்மேனிநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவனுக்கு கரும்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மூலவர் விமானம் ஏகதளத்துடன் உருண்டை வடிவில் உள்ளது. பங்குனி மாதத்தில் (ஏப்ரல் 2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்திலுள்ள அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.
ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாக தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னிபிழம்பாக காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர் என்றும், அம்மன் சிவயோகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை.
இத்தலம் வடகரை இராஜராஜவளநாட்டுப் பொய்கையூர் நாட்டுப் பணிபதிமங்கலமாகிய கரிகாலசோழ சதுர்வேதி மங்கலத்துத் திருக்கானூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.