வைத்தியநாதர் திருக்கோவில், திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்)
சிவஸ்தலம் பெயர்: திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்)
இறைவன் பெயர்: வைத்தியநாதர்
இறைவி பெயர்: தையல்நாயகி
பதிகம்: திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 1
வைத்தியநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது வைத்தீஸ்வரன்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக 270 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரி
வைத்தீஸ்வரன்கோவில்
வைத்தீஸ்வரன்கோவில் அஞ்சல்
சீர்காழி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609117
ஆலய நேரம்
காலை 5:30 முதல் பகல் 1 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | சீர்காழி - 7 கி.மீ. | |
| 2 | குறுமானக்குடி - 5.5 கி.மீ. | |
| 3 | திருநின்றியூர் - 6.4 கி.மீ. | |
| 4 | திருப்புன்கூர் - 4 கி.மீ. | |
| 5 | திருகருப்பறியலூர் - 9.3 கி.மீ. | |
| 6 | திருக்குரக்குக்கா - 10.8 கி.மீ. | |
| 7 | திருமண்ணிப்படிக்கரை - 13.9 கி.மீ. | |
| 8 | திருநனிபள்ளி புஞ்சை - 14.1 கி.மீ. |
வரைபடம் – வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில்
கோவில் அமைப்பு
கோபுரங்கள் மற்றும் பிராகாரங்கள்
நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்பமரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது.
மூலவர் சந்நிதி
மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு நேரில் இரு கொடிமரங்கள் உள்ளன. சிறிய சிவலிங்க திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகி தீராநோய் தீர்த்தருள் வல்லானாகிய வைத்தியநாதப் பெருமான் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இறைவி மற்றும் முருகர் சந்நிதி
இறைவி தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும்.
சடாயு குண்டம்
கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும், அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினைச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
பிற சந்நிதிகள்
உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி; அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, அஷ்டலட்சுமி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர்.
ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன.
தல வரலாறு
தல அறிமுகம்
தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன்கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியன் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
செவ்வாய் தோஷ பரிகாரத் தலம்
இத்தலம் நவக்கிரக ஸ்தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
கோளிலித் தலம் – நவக்கிரக சிறப்பு
இத்தலம் ஒரு கோளிலித் தலம். இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வலிமை இல்லை. நவக்கிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
இத்தலத்தை வழிபட்டோர்
சடாயு, வேதம், முருகன், சூரியன், அங்காரகன், பிரம்மா, இராமர், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, பராசர முனிவர், துர்வாச முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகங்கள்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
வைத்தியநாதர் ஆலயம் புகைப்படங்கள்