கண்ணாயிரநாதர் திருக்கோவில், திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)
சிவஸ்தலம்
திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)
இறைவன்
கண்ணாயிரநாதர்
இறைவி
முருகுவளர்கோதை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
கண்ணாயிரநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது. சிதம்பரம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் என்னும் இடத்தில் இருந்து 5 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
குறுமானக்குடி
கொண்டத்தூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609117
ஆலய நேரம்
காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை
மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருவெண்காடு - 12 கி.மீ. | |
| 2 | வைத்தீஸ்வரன்கோவில் - 5.5 கி.மீ. | |
| 3 | திருநின்றியூர் - 7.7 கி.மீ. | |
| 4 | திருநனிபள்ளி புஞ்சை - 9.8 கி.மீ. |
வரைபடம் – கண்ணாயிரநாதர் திருக்கோவில், திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)
கோவிலின் அமைப்பு
வாயில் மற்றும் மண்டபம்
கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு கட்டைக்கோபுர வாயிலும் இரண்டு பிராகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோவிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் கரையில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கட்டைக்கோபுர வாயிலின் முகப்பின் மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. உள்நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் அழகாகவுள்ளது.
வெளி மற்றும் உட்பிராகாரம்
வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. 2-வது வாயில் வழியே உள்ளே சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. உள்மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்திவிநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து, கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது; அதற்கு எதிரில் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.
மூலவர் சந்நிதி
கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர் கிழக்கு நோக்கி சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். பாணப்பகுதி சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. அடுத்து நடராஜர் சபை உள்ளது.
இறைவி சந்நிதி மற்றும் மரபு
உள் மண்டபத்தின் வலதுபுறம் பள்ளியறையும், பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன.
கோஷ்ட மூர்த்தங்கள் மற்றும் உற்சவ மூர்த்தங்கள்
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். உற்சவ மூர்த்தங்களாக பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், விநாயகர் முதலியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி தனியே உள்ளது.
தல வரலாறு
இந்திரனின் சாபமும் விமோசனமும்
தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் சந்தோஷமாக இருந்தான். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும் படி சபித்தார்; அகலிகையையும் கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர்.
இந்திரன் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார்.
பதிகம்
பதிகப் பாடல் – சம்பந்தர் கூறியது
முன்னொருகாலத்தில் இந்திரனுற்ற முனிசாபம் பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித் தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர் கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.
பொழிப்புரை: முன்னொரு காலத்தில் கௌதம முனிவரால் விளைந்த சாபத்தால் உடல் எங்கும் பெண் குறிகளோடு வருந்தித் தன்னை வழிபட்ட இந்திரனுக்குப் பின்னொரு நாளில் தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு தண்ணருளோடு அச்சாபத்தைப் போக்கி அவற்றை ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்த சிவபிரான் எழுந்தருளிய இடம், கன்னியர்கள் நாள்தோறும் கூடி வந்து வழிபடும் தலமாகிய கண்ணார்கோயில் என்பர்.
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
கண்ணாயிரநாதர் ஆலயம் புகைப்படங்கள்