பிரம்மபுரீசுவரர் திருக்கோவில், சீர்காழி
சிவஸ்தலம் பெயர்: சீர்காழி
இறைவன் பெயர்: பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்
இறைவி பெயர்: பெரியநாயகி, திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி
பதிகம்: திருநாவுக்கரசர் - 3, சம்பந்தர் - 67, சுந்தரர் - 1
பிரம்மபுரீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
சீர்காழி நகரின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் முன் நடந்தால் கோவிலை அடையலாம்.
ஆலய முகவரி
சட்டைநாத சுவாமி தேவஸ்தானம்
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609110
ஆலய நேரம்
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | கீழை திருக்காட்டுப்பள்ளி - 13 கி.மீ. | |
| 2 | திருக்குருகாவூர் வெள்ளடை - 5.3 கி.மீ. | |
| 3 | திருகோலக்கா - 1.7 கி.மீ. | |
| 4 | திருகருப்பறியலூர் - 16.5 கி.மீ. | |
| 5 | திருக்குரக்குக்கா - 11 கி.மீ. |
அருகில் உள்ள திவ்ய தேசம்
வரைபடம் - பிரம்மபுரீசுவரர் திருக்கோவில், சீர்காழி
கோவில் அமைப்பு
தோணியப்பர்
உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார். சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மா இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததால் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
நான்கு கோபுர வாயில்
சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே நான்கு கோபுர வாயில்களுடன் அமைந்துள்ளது. கிழக்கு திசையிலுள்ள ராஜகோபுரம் தான் ஆலயத்தின் பிரதான வாயில். இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன.
மேல் தளம்
கோவிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நோக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது.
சட்டைநாதர் சந்நிதி - சிறப்பு நடைமுறை
குறுகலான வழியே நுழைந்து, மரப்படிகளேறித் தரிசிக்க வேண்டும். ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டு ஏறிச்சென்று தரிசித்துப் பின்னர் வந்து போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறே, பெண்கள் தலையிலுள்ள பூவையெடுத்து வைத்துக் கொண்டு, சென்று தரிசித்து விட்டுப் பின்பு தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அம்பாள் சந்நிதி
அம்பாள் சந்நிதி தனிக்கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் கருவறை தோஷ்டத்தில் ஸ்ரீசாமளாதேவி, ஸ்ரீஇச்சாசக்தி, ஸ்ரீஞானசக்தி, ஸ்ரீகிரியாசக்தி ஆகியோர் உள்ளனர். 64 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்றாகும். அம்பாள் கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. நான்கு புறமும் நன்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
அஷ்டபைரவர் சந்நிதி
இத்தலத்திலுள்ள அஷ்டபைரவர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. தெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கத்தில் அமைந்துள்ள இந்த அஷ்டபைரவர் சந்நிதி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர் அவதரித்த இந்த சீர்காழியில் உள்ள இறைவனை பிரம்மா, முருகன், காளி, குரு, இந்திரன், சந்திரன், சூரியன், வியாச முனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் அதிகமான பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை சீர்காழி தலத்திற்குண்டு.
தல வரலாறு
சம்பந்தர் ஞானப்பால் உண்டது
7-ம் நூற்றாண்டில் சைவம் தழைக்க திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் என்ற பெருமையை உடையது சீர்காழி. சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார். "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான். இவர் சீர்காழி இறைவன் மேல் 67 பதிகங்கள் பாடியுள்ளார்.
திருமுலைப்பால் உற்சவம்
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில், அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில், அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான்.
சட்டைநாதர் வரலாறு
மாகாபலியிடம் சென்று 3 அடி மண் கேட்டுப் பெற்ற மகாவிஷ்ணு, அதன் பின்பு செருக்குற்றுத் திரிந்தார். வடுகநாதர் ஆகிய சிவபெருமான் சென்று தம் திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பிலடித்து வீழ்த்தினார். இலட்சுமி இறைவனிடம் மாங்கல்ய பிச்சை கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருள்செய்ய மகாவிஷ்ணு உயிர்பெற்றெழுந்து வணங்கினார். தம் தோலையும் எலும்பையும் அணிந்து கொள்ளுமாறு மகாவிஷ்ணு வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குமேல் அர்த்தசாமம் முடிந்தவுடன் சட்டைநாதருக்கு புனுகு எண்ணெய் சார்த்தி, நெய்யில் செய்த வடை, பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பூஜையை காண்பது மிகவும் விசேஷமானது.
முதல் தேவாரப் பதிகம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
சீர்காழி சட்டை நாதரை வெள்ளிக் கிழமை இரவில் மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கும் சமயம் முழுமையாக தரிசிக்க முடியும்.
பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம் (67)
- தோடுடைய செவியன்
- எம்பிரான் எனக்கமுத
- கறையணி வேலிலர் போலும்
- கரமுனம்மல ராற்புனல்மலர்
- இறையவன் ஈசன்எந்தை
- வண்டார்குழ லரிவையொடும்
- நிலவும் புனலும்
- பூதத்தின் படையினீர்
- மைம்மரு பூங்குழல்
- விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி
- ஆடல் அரவசைத்தான்
- உகலி யாழ்
- முன்னிய கலைப்பொருளும்
- உருவார்ந்த மெல்லியலோர்
- விடையதேறி வெறி
- இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்
- கண்ணுத லானும்
- காலைநன் மாமலர்
- விண்ணவர் தொழுதெழு
- வண்டரங்கப் புனற்கமல
- சங்கமரு முன்கைமட
- கரும்பமர் வில்லியை
- செந்நெ லங்கழ னிப்பழ
- பந்துசேர்விர லாள்
- தக்கன் வேள்வி தகர்த்தவன்
- மின்னன எயிறுடை
- பல்லடைந்த வெண்டலை
- வாருறு வனமுலை
- அன்ன மென்னடை
- நறவ நிறைவண் டறை
- எய்யா வென்றித் தானவ
- பெண்ணிய லுருவினர்
- பங்கமேறு மதிசேர்சடையார்
- எந்தமது சிந்தை
- பூவார் கொன்றை
- அடலே றமருங் கொடியண்ணல்
- நல்லார் தீமேவுந் தொழிலார்
- உரவார் கலையின் கவிதை
- நல்லானை நான்மறை
- பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
- நலங்கொள் முத்தும் மணியும்
- விண்ணி யங்குமதி
- பொங்கு வெண்புரி வளரும்
- நம்பொருள்நம் மக்களென்று
- பொடியிலங்குந் திருமேனி
- சந்த மார்முலை
- யாமாமாநீ யாமாமா
- நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்தன்
- அறையும் பூம்புன லோடும்
- திருந்துமா களிற்றிள மருப்பொடு
- பிறையணி படர்சடை முடியிடை
- அயிலுறு படையினர்
- பந்தத்தால் வந்தெப்பால்
- சேவுயருந் திண்கொடியான்
- மண்ணின்நல் லவண்ணம்
- மடல்மலி கொன்றை
- எரியார்மழுவொன் றேந்தி
- அரனை உள்குவீர்
- காட தணிகலங் காரர
- பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
- ஓருரு வாயினை
- பிரமனூர் வேணுபுரம்
- விளங்கியசீர்ப் பிரமனூர்
- பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
- சுரருலகு நரர்கள்பயில்
- வரம தேகொளா உரம தேசெயும்
- உற்றுமை சேர்வது மெய்யினையே
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம் (3)
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம் (1)
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ் (14)
- அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
- இரத மான தேனூற லதர மான மாமாத
- ஊனத்தசை தோல்கள் சுமந்த
- ஒய்யா ரச்சிலை
- கட்கா மக்ரோ தத்தே கட்சீ
- கொங்கு லாவிய குழலினு
- சந்த னம்பரி மளபுழு
- சருவி யிகழ்ந்து மருண்டு
- சிந்துற்றெழு மாமதி
- செக்கர்வா னப்பிறை
- தினமணி சார்ங்க பாணி
- பூமாதுர மேயணி மான்மறை
- மதனச்சொற் காரக் காரிகள்
- விடமெனமி குத்தவட
பிரம்மபுரீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்