குந்தளநாதர் திருக்கோவில், திருக்குரக்குக்கா
சிவஸ்தலம்
திருக்குரக்குக்கா (தற்போது திருக்குரக்காவல் என்று வழங்குகிறது)
இறைவன்
குந்தளநாதர், குந்தளேஸ்வரர், குண்டலகர்ணேஸ்வரர்
இறைவி
குந்தளநாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
குந்தளநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
பயண குறிப்பு
திருகுரக்குக்கா, திருவாளொளிபுத்தூர், திருக்கறுப்பறியலூர், திருப்புன்கூர் ஆகிய இந்த நான்கு ஸ்தலங்களையும் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து எளிதாக சென்று தரிசிக்கலாம். முதலில் குரக்குக்கா சென்று, அங்கிருந்து திருவாளொளிபுத்தூர், திருக்கறுப்பறியலூர் தரிசித்துவிட்டு திருப்புன்கூர் முடித்துக்கொண்டு வைத்தீஸ்வரன் கோயில் வந்தடையலாம். திருப்புன்கூர் தவிர்த்து மற்ற மூன்று ஸ்தலங்களும், நகரை விட்டு உள்புறமாக இருப்பதால் இருட்டும் முன் தரிசிப்பது நல்லது.
ஆலய முகவரி
திருக்குரக்காவல்
இளந்தோப்பு அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609201
ஆலய நேரம்
காலை : 6:00 - 12:00
மாலை : 4:00 - 8:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
தல வரலாறு
தலம் பெயர் வரலாறு
பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று. மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா. குரங்கு வழிபட்டதால் இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரமில்லை. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் உள்ளன. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சனேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது.
ஆஞ்சனேயர் — தல தலைவர்
இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முற்பட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவ அபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது. இது ஊர் மக்கள் இன்றளவும் பார்க்கும் உண்மை சம்பவமாகும்.
தீர்த்தம் & பரிகார சிறப்பு
ஆஞ்சனேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், சூரியன் மற்றும் சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் ஆஞ்சனேயரையும் வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள். ஆலய தீர்த்தம் கணபதி நதி எனப்படும் பழவாறு. இதில் நீராடினால் புத்திர பாக்கியம் ஏற்படும், திருமணத் தடை நீங்கும்.
பதிக சிறப்பு
திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை, குரக்குக்கா பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும், குரக்குக்காவில் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை என்று அப்பர் பெருமான் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
பதிகம்
திருநாவுக்கரசர்
குந்தளநாதர் ஆலயம் புகைப்படங்கள்