தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

இடவை திருமாலீசுவரர் திருக்கோவில், வைப்புத் தலம்

சிவஸ்தலம்

இடவை (இன்றையநாளில் இத்தலம் நஞ்சை இடையாறு என்று அழைக்கப்படுகிறது)

இறைவன்

திருமாலீசுவரர், திருவேலிநாதர், திருஎயிலிநாதர்

இறைவி

ஶ்ரீசுந்தரவல்லி

பதிகம்

அப்பர் (6-70-3)

எப்படிப் போவது

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் வைப்புத் தலத்தில் இருந்து வடமேற்கே பரமத்திவேலூர் செல்லும் வழியில் நஞ்சை இடையாறு தலம் உள்ளது. பரமத்தி வேலூரில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு திருமாலீசுவரர் திருக்கோவில்
நஞ்சை இடையாறு
நாமக்கல் மாவட்டம்
PIN - 636182

ஆலய நேரம்

காலை :  6:00 - 12:00

மாலை :  4:00 - 8:00

வரைபடம் – இடவை திருமாலீசுவரர் திருக்கோவில், வைப்புத் தலம்
ஆலயச் சிறப்பும் வரலாறும்
பெயர்க் காரணம்

காவிரி ஆறுக்கும், திருமணிமுத்தாறுக்கும் இடையே அமைந்த செழிப்பான ஊர் என்பதால் "நஞ்சை இடையாறு" என்ற காரணப் பெயர் இந்தத் தலத்திற்கு ஏற்பட்டது. கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி இது. ஊரைச் சுற்றி பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்கள் உள்ளன. இந்தக் கோயிலின் சுற்று மதிலுக்குள்ளேயே சீனிவாச பெருமாள் கோயிலும் உள்ளது.

வரலாற்றுச் சிறப்பு

இராசேந்திர சிங்கவள நாட்டு மண்ணி நாட்டு இடவை எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினார்கள் என்பதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்தக் கோயில் கி.பி. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தகவல் உள்ளது. இத்தல இறைவனை மகாவிஷ்ணு வழிபட்டுள்ளார். கொங்கு வேளாளர் சமூகத்தின் ராஜா சாமி என்ற சிவன் கோவிலும் நஞ்சை இடையாறு தலத்தில் உள்ளது.

பீமன் பிரதிஷ்டை - தல புராணம்

பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நஞ்சை இடையாறில் உள்ளது. பீமன் தன்னைவிட இந்த உலகில் பலசாலி யாருமில்லை என்று கருதி அவ்வாறே சொல்லித் திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழைக் குறைத்தது. அவனுக்குப் புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி, சிவபெருமான் மனித உடலும் மிருக தலையும் கொண்ட புருஷாமிருகம் என்ற ஒன்றை ஏவினார். அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, "கோவிந்தா, கோபாலா" எனக் கதறிக்கொண்டே ஓடினான். சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடமிருந்து தப்பினான். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகிப் பாயும் திருமணி முத்தாற்றின் கரையோரத்தில் உள்ள ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்தான். அங்கே சிவபெருமான் எழுந்தருளினார். சேலம் சுகவனேசுவர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர், பரமத்தி பீமேஸ்வரர், நஞ்சை இடையாறு திருஎயிலிநாதர் கோயில்களே அவை.

பதிக குறிப்பு
பதிகப் பாடல் (6-70-3)

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


இடைமருது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாயநாதனையே காணலாமே.
பொழிப்புரை

இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.

இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் பிற வைப்புத் தலங்கள்

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், கோத்திட்டை, கோட்டுக்காடு ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.