தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர் என்று வழங்குகிறது) |
இறைவன் பெயர் | நடுத்தறியப்பர், நடுத்தறிநாதர், |
இறைவி பெயர் | மாதுமை நாயகி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
எப்படிப் போவது | திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு இடப்புறமாகப் பிரியும் உள்சாலையில் 1 கி.மீ. சென்றால் தலத்தையடையலாம். (கீழ கண்ணாப்பூர் என்ற ஊர் ஒன்றுள்ளது. பாடல் பெற்ற தலம் அதுவன்று. எனவே கோயில் கண்ணாப்பூர் என்று கேட்க வேண்டும்). திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கோயில் கண்ணாப்பூர் நிறுத்தத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம். |
ஆலய முகவரி |
அருள்மிகு நடுத்தறியப்பர் திருக்கோவில் கோயில் கண்ணாப்பூர் கோயில் கண்ணாப்பூர் அஞ்சல் வழி வலிவலம் S.O. திருவாரூர் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 610202 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருவாரூரில் இருந்து திருக்காறாயில் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
தல வரலாறு: சைவ சமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியானாள். புகுந்த வீட்டில் மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். அவள் கணவன் அதுகண்டு மனைவி வழிபாடு செய்து வந்த அந்த இலிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட்டான். அப்பெண் வேறுவழியின்றி வீட்டின் பின்புறம் கன்று கட்டியிருந்த தறியையே (ஆப்பு) சிவபெருமானாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். ஒரு நாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அத்தறியைக் கோடரியால் வெட்டினான். தறி இரண்டாக பிளந்து அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அவன் மனைவியின் பக்தியை உலகத்தவரும், அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் லிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார். இறைவன் அந்த ஆப்பில் இருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த தலம் திருகன்றாப்பூர். (கன்று + ஆப்பு + ஊர்). சைவப்பெண்ணும், அவள் கணவனும் சிவலோகம் அடைந்தனர். கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர் என வழங்கப்பெற்றது. இந்த லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுத்தறிநாதர் எனப்பட்டார். அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுத்தறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. மூல லிங்கத்தின் பாணப் பகுதியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய இக்கோவில் மூன்று நிலைகளையுடைய சிறிய இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இவ்வாலயத்தில் கொடிமரமில்லை. பலிபீடம், நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள் பிரகாரம் சுற்றி வரும்போது தீர்த்த கிணறு, விநாயகர், அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், விநாயக மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன் சந்நிதிகள் உள்ளன. சனிபகவானை அடுத்து சம்பந்தர், அப்பர் இருவரும் காட்சி தருகின்றனர்.
பிரகாரம் வலம் முடித்து முன் மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருமேனியுடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நேரே மூலவர் நடுத்தறியப்பர் தரிசனம் தருகிறார். மூலவர் சதுரபீடம் ஆவுடையார் மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
Top