Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்காறாயில் (தற்போது திருக்காரவாசல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்கண்ணாயிரநாதர்
இறைவி பெயர்கைலாயநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூர் . திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கொள்ளிலி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு
கண்ணாயிரநாதர் திருக்கோவில்
திருக்காரவாசல் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610202

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
tirukaravasal route map

திருவாரூரில் இருந்து திருக்காறாயில் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தலத்தின் சிறப்பு: கார் அகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால் காறாயில் என்று பெயர் பெற்றது. பிரம்மாவிற்கு ஒருமுறை தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட திருவுளம் கொண்டு அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி நமக்கு அருட்காடசி தருகிறார். கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தியாகராஜர் சந்நிதி முன்னுள்ள நந்தி நான்கு கால்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.

திருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும். கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. முதல வாயிலைக் கடந்து உள் சென்றவுடன் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் உள்ள நந்தி ஆகியவற்றைக் காணலாம். இரண்டாவது நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய கோபுரம் உள்ளது. கோபுர வாயிலைத் தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, சுந்தரர், (உற்சவர்) சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஆறுமுகசுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன.

இத்தலத்தில் இறைவியாரது திருப்பெயர் கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசித்து மகிழத்தக்க அமைப்புடைய சந்நிதிகள். மூலவருக்கு முன்னால் பக்கத்தில் நடராஜசபை உள்ளது. உற்சவத் திருமேனிகளுள் காட்சி தந்த நாயனார் திருமேனி தரிசிக்கத்தக்கது. இவர் பின்னால் நந்தியுடனும், அருகில் உமையும் கூடியவாறு காட்சி தருகிறார். மகாவிஷ்ணு, பிட்சாடனர், அகஸ்தீஸ்வரர், கைலாசமேஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், விஸ்வநாதர், எல்லையம்மன், சுப்ரமண்யர், கஜலட்சுமி, நாகர், சரஸ்வதி, துர்க்கை, பைரவர், நால்வர் ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இங்குள்ள மூன்று பைரவர்கள் சந்நிதியாகும். காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே தரிசனம் செய்வதைக் காணலாம். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

சப்த விடங்கத் தலம்: முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திரனிடம் இருந்து பெற்றுக் கொண்டு வந்த தியாகேசர் திருமேனிகள் ஏழில் ஒன்றை எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் திருக்காறாயில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார். இந்த திருக்காரவாசலில் தியாகராஜர் வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள்புரிகிறார். திருவாரூரில் வீதிவிடங்க தியாகேசரின் அஜபா நடனத்தைக் கண்டுகளித்த பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டியருள வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார். திருக்காராயில் வந்தால் காணலாம் என்று தியாகராஜர் கூறி, அதன்படி பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை ஆடிக் காட்டிய தலம்தான் இந்த திருக்காரவாசல். தியாகேசருக்கு நேர் எதிரில் சுந்தரர் சந்நிதி அமைந்துள்ளது

இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு. ஆதிசேஷன் இந்த கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வேண்டுவோர்க்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சேஷ தீர்த்தத்து நீரைப் பருகி வந்தால் தீராத நோய்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம். இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது.

இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்று பெயர் பெற ஒரு தலபுராண வரலாறு உண்டு. வணிகன் ஒருவன் இத்தலத்து வழியே வர்த்தக நிமித்தமாக வரும் போது இங்குள்ள சேஷ தீர்த்தக்கரையில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் வேண்டுமென்றே கடுக்காய் இருக்கிறது என்று பதில் கூறினான். விநாயகர் புன்னகை புரிந்தார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க அவைகளில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம் என்று உணர்ந்த அவன் இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள் புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இவர் சந்நிதி பிரம்ம தீர்த்தக்கரையில் உள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

Top
கண்ணாயிரநாதர் ஆலயம் புகைப்படங்கள்
முகப்பு வாயில், பின்புறம் 3 நிலை கோபுரம்
கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்
விநாயகர் சந்நிதி
இந்திரபுரீஸ்வரர், மகாவிஷ்ணு, விஸ்வநாதர்
உட்பிராகாரம்
வள்ளி தெய்வானையுடன் முருகர்
கண்ணாயிரநாதசுவாமி சந்நிதி
கைலாயநாயகி சந்நிதி
தியாகராஜர் சந்நிதி முன் நந்தி
கடுக்காய் பிள்ளையார் சந்நிதி
பிரம்ம தீர்த்தம்