Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகொள்ளிக்காடு
இறைவன் பெயர்அக்னீசுவரர், தீவண்ணநாதர்
இறைவி பெயர்பஞ்சினும் மெல்லடியம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா மற்றும் திருத்தெங்கூர் என்ற இரண்டு பாடல் பெற்ற தலங்கள் உள்ளன.
ஆலய முகவரிஅருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
திருக்கொள்ளிக்காடு
கீராலத்தூர் அஞ்சல்
(வழி) திருநெல்லிக்காவல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610205

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
kollikkaadu route map

திருவாரூரில் இருந்து திருகொள்ளிக்காடு செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்தது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு என்னும் தலமாகும். திருநெல்லிக்காவல், திருத்தங்கூர், கோட்டூர், திருவண்டுதுறை ஆகிய தலங்களின் நடுவே அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களையும் கொண்ட இத்தலத்தின் இறைவன் அக்னீஸ்வரர்.. சனி தோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட இத்தலம் சிறப்பு பெற்றது. சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு : இக்கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. மேறகு நோக்கிய ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் மேறகு வெளிப் பிரகாரத்தில் நாம் காண்பது கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி. அதைத் தாண்டி உள் வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால் திருகொள்ளிக்காடு என்றும் அக்னிதேவன் வழிபட்ட இறைவன் அக்னீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவனுக்கு உள்ள மற்றொரு பெயர் தீவண்ணநாதர். பெயருக்கு ஏற்றாற்போல் இங்குள்ள இறைவன் மேனி சற்று செவ்வொளி படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் சந்நிதிக்கு முன்னால், இடப்பக்கத்தில் இறைவி பஞ்சினும் மெல்லடியம்மை சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர் விளங்குகின்றனர். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர். இங்குள்ள முருகன் மற்ற கோயிலைப்போலல்லாமல் கையில் வில்லேந்திய தனுசு சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக கோவிலுக்கு எதிரில் உள்ள வன்னியும், தீர்த்தமாக கோயிலுக்கு எதிரில் உள்ள குளமும் உள்ளது.

மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது. மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவானின் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் மிகச்சிறந்த அம்சமாகும். திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷம். நளன் இத்தலத்தில் சனீஸ்வரரை வழிபட்டுள்ளான் என்ற சிறப்பு இடையது இச்சந்நிதி. புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான் என்பது பிரசித்தம். சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனியாக காட்சி அளிப்பதால் அவர் அருள் வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள். ஆனால இவ்வாலயத்தில் "ப" வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி பருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வேலையில்லை.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

அக்னீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
திருகொள்ளிக்காடு ஆலயத்தின் முகப்பு வாயில்
கொடிமரம், நந்தி மண்டபம்
ப வடிவில் நவக்கிரகங்கள்
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்