Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவுசத்தானம் (கோயிலூர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்மந்திர புரீசுவரர்
இறைவி பெயர்பெரியநாயகி, பிருகந்நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் 1 கி.மீ. தொலைவில் சாலையிலேயே கோயிலின் வளைவு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் தேவஸ்தானம் என்று உள்ளது. அதனுள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம். முத்துபேட்டையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருக்கோவில்
கோவிலூர்
முத்துப்பேட்டை அஞ்சல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614704

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: சிவபாத சுந்தரம், அர்ச்சகர் - தொலைபேசி: 04369 262014
usathanam route map

முத்துப்பேட்டையில் இருந்து திருவுசத்தானம் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இவ்வாலயம் ஐந்து நிலைகளையுடைய இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு எதிரே ஆலயத்தின் திருக்குளம் உள்ளது. குளக்கரையில் விநாயகர் சந்நிதி உள்ளது. இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் உட்புறத்தில் இடதுபுறம் சிறிய தீர்த்தமும், வலதுபுறத்தில் அம்பாள் கோயிலும் அமைந்துள்ளது. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் நந்தி ஆகியவற்றையும் இந்த வெளிப் பிரகாரத்தில் காணலாம். இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளையுடையது. துவார கணபதி, சுப்பிரமணியரைத் தொழுது, உள்புகும்போது வாயிலில் இடதுபுறம் அதிகார நந்தி காட்சி தருகிறார். உட்பிரகாரம் வலம் வரும்போது சூரியன், தலப்பதிகக் கல்வெட்டுக்கள், அறுபத்துமூவர், (நேர் எதிரில் கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று கால்களுடனும் காட்சி தருகிறார் - அழகான உருவம், தரிசிக்கத்தக்கது) கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர், ராகு - கேது, சப்த மாதர்கள், வீரபத்திரர், காளி, காசிவிசுவநாதர், சூதவன விநாயகர், சோமாஸ்கந்தர், வருணன் அவர் வழிபட்ட லிங்கம், இராமர் அவர் வழிபட்ட லிங்கம், மார்க்கண்டேயர் அவர் வழிபட்ட லிங்கம், அன்னபூரணி, சுப்பிரமணியர், வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி நவகன்னியர், சனிபகவான், நடராஜ சபை, பைரவர், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன.

உட்பிரகாரத்தை அடுத்துள்ள முன்மண்டபத்தில் தல வரலாறு வண்ண ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். கருவறை வாயிலின் இருபுறங்களிலும் சங்கநிதி, பதுமநிதி மூர்த்தங்கள் உள்ளன. நேரே மூலவர் மந்திரபுரீசுவரர் சதுரபீடத்தில் சுயம்பு லிங்க வடிவில் இடதுபுறம் சற்றே சாய்ந்த நிலையில் குனிந்து சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கருட பகவான் வானவெளியில் அமுத கலசத்தை ஏந்திச் செல்லும்போது சிந்திய அமுதம் இறைவன் மீது பட்டதால் இறைவன் வெண்மை நிறமாக காட்சி அளிக்கிறார்.

தல வரலாறு: இந்திரன், விசுவாமித்திரர், இராமர், இலட்சுமனன், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டுள்ளனர். விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம். இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. எனவே இறைவன் திருப்பெயர் மந்திரிபுரீஸ்வரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்து) காரணத்தால் இத்தலம் உசாத்தானம் என்று பெயர் பெற்றது. இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், ஜாம்பவான் ஒடை, அநுமான் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்கு நல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன. இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது. சூதவனம் என்றால் மாங்காடு. இதற்கேற்ப தலவிநாயகர் சூதவன விநாயகர் என்ற பெயருடன் மாவிலையைக் கரத்தில் ஏந்தியபடி காட்சி தருகிறார்.

இவ்வாலயத்தின் தலமரமாக மாமரமும், தீர்த்தங்களாக அநும தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், நெல்லி தீர்த்தம், குஞ்சித தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம் ஆகியவையும் விளங்குகின்றன.

தலத்தின் சிறப்பு: ஸ்ரீராமர் இலங்கை செல்ல இராமேஸ்வரம் அருகில் கடலில் அணை கட்டுவதற்கு முன்பு இத்தலத்தை தரிசித்து சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. இராமருக்கு மந்திர உபதேசம் செய்யும் நிலையில் சிவபெருமான் சற்று வடபுறமாக சாய்ந்து காணப்படுகிறார். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிற்றினால் உண்டான வடுக்கள் நீங்க இத்தலத்தில் தன் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, இத்தலத்து இறைவனை வழிபட்டு வடுக்கள் நீங்கப் பெற்றார். இத்தலத்தில் நடராஜப் பெருமான் விஸ்வாமித்திரருக்கு நடனக் காட்சி தந்துள்ளார்.

மந்திரபுரீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜகோபுரம்
3 நிலை 2-வது கோபுரம்
நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம்
அம்பாள் சந்நிதி தனி கோவில்
கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர்
கருவறை சுற்றுப் பிராகாரத்தில் ராகு கேது
மகாவிஷ்ணு, ராமர் பூஜித்த லிங்கம்
வெளிப் பிராகாரத்தின் ஒரு தோற்றம்
தனி சந்நிதியில் சனி பகவான்