தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருச்சிற்றேமம் (இன்றைய நாளில் சித்தாய்மூர், சிற்றாய்மூர் என்று பெயர்) |
இறைவன் பெயர் | பொன்வைத்த நாதேசுவரர், சுவர்ண ஸ்தாபனேஸ்வரர் |
இறைவி பெயர் | அகிலாண்டேஸ்வரி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் ஆலத்தம்பாடி வந்து அங்கிருந்து சித்தாய்மூர் என்ற கைகாட்டி உள்ள இடத்தில் கிழக்கே பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ. சென்றால் இத்தலம் அடையலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 14 கி.மீ.தொலைவில் இத்தலம் உள்ளது. போக்குவரத்து வசதிகள் குறைவானதால் தனி வாகனத்தில் செல்வது நல்லது. |
ஆலய முகவரி | அருள்மிகு சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருக்கோயில் சித்தாய்மூர் சித்தாய்மூர் அஞ்சல் பொன்னிறை - S.O. திருவாரூர் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 610203 இவ்வாலயம் தினந்தோறும் காலை 9-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: திரு ரவிகுமார் ஆலய அர்ச்சகர், கைபேசி: 9943417739 |
திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிற்றேமம் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Yahoo Maps
தல வரலாறு: இவ்வூரில் ஒரு வணிகர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மனைவி கருவுற்று சில நாட்களில் பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு வெளியூர் சென்றார். வணிகர் வெளியூர் சென்ற போது அவர் மனைவி கருவுற்று இருப்பது தெரியாது. தனியாக ஊரிலிருந்த மனைவி சிவப்பற்று கொண்டு, சிவத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள். அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசுவைத்து உதவ, அவள் அதை விற்று வாழ்வு நடத்தி வந்தாள். மகப்பேறு காலம் நெருங்கியது. இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து உதவிட, மகவினைப் பெற்றெடுத்தாள். சிலகாலம் கழித்து வணிகர் ஊர் திரும்பினார். ஊர் மக்கள் சிலர் அவர் மனைவியின் மேல் பொய் ஒழுக்கக் குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்ட, இறைவன் கோயிற்கதவைத் தானே திறக்கச் செய்தும், சந்நிதிக்கு பின்னிருந்த ஆத்திமரத்தை இடம் பெயர்ந்து கோவிலுக்கு முன்புறம் வரச்செய்தும், பலிபீடத்திற்கு முன்னிருந்த நந்திதேவரைப் பலிபீடத்தின் பின் இடம் மாறியிருக்கும்படி போகச் செய்தும் பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார் என்பர்.
திருச்சிற்றேமத்திற்கு வடக்கிலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்து மன்னனுக்கு நாடொறும் இவ்வூர் வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அப்பாற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடையலாயிற்று. அரசன் காரணத்தை அறிய அவ்விடத்தை தோண்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனி கண்டான். இறைவனை வணங்கி அவ்விடத்தில் பெருமானுக்கு கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதற்கு அடையாளமாக சிவலிங்கத்தின்மீது வெட்டுக்காயம் உள்ளதைப் பார்க்கலாம்.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே தலவிருட்சம் ஆத்தி மரம், நந்தி, பலிபீடம் உள்ளன. தல வரலாற்றின் படி நந்தி பலிபீடத்திற்கு பின்புறம் உள்ளது. ஆத்தி மரத்தடியில் ஆத்திமர விநாயகரும் உள்ளார். இத்தல இறைவன் கிழக்கு நோக்கு காட்சி தருகிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி சந்நிதி தெற்கு தோக்கி அமைந்துள்ளது. பிராகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. பிரமரிஷி, ஐயனார், பைரவர், சனி பகவான், சூரியன், விசுவநாதர் சந்நிதிகள் தரிசிக்கத்தக்கவை. வேலவர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்மன், பிரதோஷநாயகர், சந்திரசேகரர் மற்றும் தலவரலாற்றுடன் தொடர்புடைய வணிகர், அவர் மனைவி ஆகியோர், சம்பந்தர் முதலியோரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்திற்கு வடக்கில் ஆலய தீர்த்தம் சொர்ணபுஷ்கரணி உள்ளது.
தேன்கூடு வரலாறு: முன்னொரு காலத்தில் பிரம்மரிஷி தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் திருக்கோவிலுக்கு வர நேரமாகி வட்டது. கோவில் திருக்கதவுகள் காப்பிடப்பட்டு விட்டன. பிரம்மரிஷி முனிவர் தேனீ உருவெடுத்து சாளரத்தின் வழியே உள்ளே சென்று இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கத் தொடங்கினார். சித்தர்களும் இத்தலத்தில் தேனீ உருவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். சுவாமி சந்நிதியின் தென்பக்கத்தில் உள்ள தேன்கூடு சித்தர்கள் தேனீக்களாக உருமாறி இறைவனை பூஜித்து தேன்கூட்டைக் கட்டினர் என்பது ஐதீகம். இத்தேன் கூட்டிற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது.
இத்திருக் கோயிலின் பக்கத்தில் திருமால் ஆலயம் உள்ளது. இவ்வூருக்குக் கிழக்கில் திருவாய்மூரும், மேற்கில் கைச்சினமும், வடக்கில் வலிவலம், திருக்குவளை, குண்டையூரும், வடகிழக்கில் எட்டுக்குடியும் உள்ளன.
பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் திருச்சிற்றம்பலம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரிலுள்ள பெரியநாயகி உடனுறை புராதனவனேஸ்வரர் கோவிலே சிற்றேமம் என்ற பாடல் பெற்ற தலம் என்று ஒரு கருத்தும் உள்ளது. இக்கோயிலுள்ள பழைய கல்வெட்டுக்கள் எல்லாம் இவ்வூரைச் சிற்றேமம் என்றே குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் உள்ள சோழ மன்னன் மதுரைகொண்ட கோப்பரகேரி வர்மர், பாண்டிய மன்னன் வரகுணமகாராசர், முதலானோர் கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் என்றும், கி. பி. 1459-ல் ஏற்பட்ட கல்வெட்டில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றம்பலம் என்றும்; இறைவரின் திருப்பெயர் திருச்சிற்றேமத்து மகாதேவர், திருச்சிற்றேமமுடையார் எனவும் கூறப்பெற்றுள்ளன. இக்கோவிலில் காணப்படும் கல்வேட்டுகளில் இத்தல இறைவன் சிற்றேமத்து மகாதேவர் என்றும் சிற்றமேமுடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இத்தலமே பாடல் பெற்ற சிவஸ்தலமான திருச்சிற்றேமம் என்று கூறுவர்.