ஆபத்சகாயேசுவரர் திருக்கோவில், திருஇரும்பூளை (ஆலங்குடி)
சிவஸ்தலம்
திருஇரும்பூளை (தற்போது ஆலங்குடி என்ற பெயரில் அறியப்படுகிறது)
இறைவன்
ஆபத்சகாயேசுவரர்
இறைவி
ஏலவார் குழலியம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
ஆபத்சகாயேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது.
ஆலய முகவரி
ஆலங்குடி
வலங்கைமான் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612801
ஆலய நேரம்
காலை : 6:00 - 13:00
மாலை : 4:00 - 9:00
தொடர்பு
செயல் அலுவலர்
04374 269407
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
ஆலயச் சிறப்பும் வரலாறும்
தல வரலாறு
குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும் இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இக்கோவில் திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டான். அமைச்சர் மறுக்க அவரின் தலையை வெட்டிவிடும் படி முசுகுந்தன் கூறினான். கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சப்தம் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான் என்பது வரலாறு. மற்றுமொரு புராணச் செய்தியின் படி தேவர்கள் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடையும் போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் உண்ட தலம் இதுவாகும். இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால் இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
பரிவாரத் தலங்கள்
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கப் பெருமானுக்கு 9 பரிவாரத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஆலங்குடி தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது. மற்ற பரிவாரத் தலங்கள் முறையே 1) திருவலஞ்சுழி (விநாயகர்), 2) சுவாமிமலை (முருகன்), 3) திருவாவடுதுறை (நந்திகேஸ்வரர்), 4) சூரியனார்கோவில் (நவக்கிரகம்), 5) திருவாப்பாடி (சண்டிகேஸ்வரர்), 6) சிதம்பரம் (நடராஜர்), 7) சீர்காழீ (பைரவர்) மற்றும் 8) திருவாரூர் (சோமஸ்கந்தர்).
குரு தட்சிணாமூர்த்தி பெருமை
இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்தி தான் பிரபலமானவர். குருவே தட்சினாமூர்த்தியாகவும், தட்சினாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விசேஷம். ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு சந்தான பாக்கியம் பெற்றாள். ஆலங்குடி தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ் பாடிய மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவி சமேதராய் வரதராஜப் பெருமாளாக இங்கு கோவில் கொண்டார். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.
கோவில் அமைப்பு
ராஜகோபுரம்
நான்கு புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயம் சுமார் 1¼ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. இத்தல விநாயகர் கலங்காமற் காத்த விநாயகர் என்று பெயர் பெற்றவர். கோபுர வாயிலில் உள்ளார். ஆலகால விஷத்தால் கலங்கிய தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர். உள்ளே முதல் பிரகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
பிற சந்நிதிகள்
இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. சூரிய பகவானின் சந்நிதிக்கு தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி இருக்கிறது. அடுத்து வரும் உள் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமாக அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். சோமஸ்கந்தர் சந்நிதியில் இருக்கும் இந்த திருஉருவம் சுமார் மூன்றரையடி உயரம் இருக்கும். ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின் போது இவர் வெளியே உலா வருகிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விசுவாமித்திரர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும் இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்து கொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும்.
பஞ்ச ஆரண்யத் தலங்கள் பெருமை
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்:
- திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்கால வழிபாட்டிற்குரியது.
- அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.
- அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
- ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
- திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.