Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருபள்ளியின்முக்கூடல் (குருவிராமேஸ்வரம்)
இறைவன் பெயர்திரிநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர், முக்கோண நாதர்
இறைவி பெயர்அஞ்சனாட்சி, மைமேவு கண்ணியம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது திருவாரூரிலிருந்து கடைத் தெரு வழியாகக் கேக்கரை செல்லும் சாலையில் வந்து, ரயில்வே லெவல்கிராசிங்கைத் தாண்டி கேக்கரையை அடைந்து, அங்கிருந்து அதே சாலையில் மேலும் 1 கி.மீ. சென்று சிறிய பாலத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்று, அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் சென்றும் (வரைபடம் பார்க்கவும்) இத்தலத்தை அடையலாம். திருவிற்குடி என்கிற சிவஸ்தலம் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு முக்கோண நாதேசுவரர் திருக்கோயில்
திருப்பள்ளி முக்கூடல்
கேக்கரை அஞ்சல்
வழி திருவாரூர்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610002

இவ்வாலயம் தினந்தோறும் காலை 11மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
mukkudal route map

திருவாரூரில் இருந்து திருபள்ளியின்முக்கூடல் சிவாலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: இத்தல வரலாறு இராமாயண இதிகாசத்தில் வரும் ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் "குருவிராமேஸ்வரம்" என்றும் கூறுகின்றனர். ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது. இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து, "இராவணன் சீதையை எடுத்து வரும் நேரத்தில் நீ தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்” என்றாராம். அது கேட்ட ஜடாயு "பெருமானே, அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமற்போகுமே, அதற்கு என்ன செய்வது" என்று வேண்ட, இறைவன் மூக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க ஜடாயுவும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றது. இவ்வரலாற்றை யொட்டித்தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை "குருவிராமேஸ்வரம்" என்று கூறுகின்றனர். இதனால் கோவில் எதிரிலுள்ள இத்தீர்த்தமும் கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராக கருதப்படுகிறது. இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் "ஷோடசசேது" என்றும் சொல்லப்படுகிறது.

தலச் சிறப்பு: தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அஞ்சனாட்சி அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.

இத்தலத்திலுள்ள முக்கூடல் தீரத்தக் குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில் நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை. ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று. முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் "கேக்கரை" என்றும் அழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு: இத்தலத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மதிற்சுவர் மாடங்களில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். முகப்பு வாயில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரின் சுதை உருவங்கள் உள்ளன. உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சூரியன் சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் காணப்படுகின்றன. உள் மண்டபத்தில் நுழைந்து சென்றால் நேரே மூலவர் அழகாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி மாதத்தில் சிவராத்திரி நாளில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுவது இத்தலத்தின் சிறப்பம்சம். சுற்றுப் பிராகாரத்தில் நாகர், பைரவர், சனீஸ்வரர், வள்ளி, சூரியன், சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர் சந்நிதியும், தனியே சுப்பிரமணியர் சந்நிதியும், கஜலட்சுமி சந்நிதியும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன.

வடமொழியில் திரிநேத்ர சுவாமி என்று கூறப்படும் இத்தல இறைவன் பெயர் அதற்கு இணையாக தமிழில் முக்கண்நாதர் என்றிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் சிதைவுற்று தொடர்பே இல்லாமல் முக்கோணநாதர் என்று வழங்குகிறது.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த இத்தலத்திற்கான பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் தான் தடுமாறித் திரிந்து உழன்ற செயல் இரங்கத்தக்கது என்று தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் நெகிழ்ச்சியுடன் அப்பர் பெருமான் குறிப்பிடுகிறார்.

Top
முக்கோண நாதேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் முகப்பு வாயில்
முகப்பு வாயில் மேற்புறத்தில் உள்ள சுதைச் சிற்பங்கள்
முகப்பு வாயில் மதிற்சுவர் மாடத்தில் விநாயகர்
முகப்பு வாயில் மதிற்சுவர் மாடத்தில் முருகர்
சுற்றுப் பிராகாரத்தில் நாகர், பைரவர், சனீஸ்வரர், வள்ளி, சூரியன், சந்திரன்
பலிபீடம், நந்தி
பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி
இறைவன் கருவறை விமானம்
வள்ளி தெய்வானையுடன் முருகர்