Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருத்தேவூர்
இறைவன் பெயர்தேவபுரீசுவரர், தேவகுருநாதர், கதலிவனேசர்
இறைவி பெயர்மதுரபாஷினி, தேன்மொழியம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலை வழியில் கீவளூரை அடைந்து, அங்கிருந்து திருத்துளைப்பூண்டி செல்லும் சாலையில் சென்றால் தேவூரை அடையலாம். திருவாரூர் - வலிவலம் நகரப்பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது. தேவூரில் அக்ரஹாரம் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோயிலுக்கு எதிரிலேயே இறங்கலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில்
தேவூர்
தேவூர் அஞ்சல்
வழி கீவளூர்
கீவளூர் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 611109

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
thevur route map

திருவாரூரில் இருந்து தேவூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் அமைப்பு : இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. நேரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் காணலாம். கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராசசபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன. கட்டுமலை ஏறி மேலே சென்றால் கௌதமர் வழிபட்ட லிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம். மூலவர் தேவபுரீசுவரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.

தலவிருட்சம்: இத்தலத்து தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது தேவலோகத்தில் உள்ள வெள்வாழையும் இறைவனை இங்கு வழிபட்டு தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழைமரத்திற்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த ஸ்தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழைமரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.

தலத்தின் சிறப்பு: ராவணன் குபேரனுடன் போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற அமிர்த கலசங்களை எடுத்துச் சென்றான். குபேர ஸ்தானத்தை இழந்த குபேரன் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டதால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தைப் பெற்றான். குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட ஸ்தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.

இந்திரன் விருத்தாசுரனைக் கொன்ற பாவத்திற்கு இந்திர பட்டத்தை இழந்தபோது, இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்று மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால் பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.

இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும். கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் படுவதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள்.

திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் தேவூர் தலத்து இறைவனை திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.

Top
தேவபுரீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
தொலைவிலிருந்து இராஜகோபுரத்தின் தோற்றம்
3 நிலை இராஜகோபுரம்
கோபுர வாயில் கடந்து உள் தோற்றம் - கொடிமரம் மற்றும் மாடக்கோவில்
மாடக்கோவிலுக்குச் செல்லும் வழி
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
மாடக் கோவில் விமானம்
கெளதம லிங்கம்
அம்பாள் மதுரபாஷினி சந்நிதி
தேவகுருநாதர்