தகவல் பலகை | |
---|---|
இறைவன் பெயர் | வெண்ணைப்பிராண், நவநீதேஸ்வரர் |
இறைவி பெயர் | வேல் நெடுங்கண்ணி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | நாகப்பட்டினத்தில் இருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் தலம் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில் சிக்கல் சிக்கல் அஞ்சல் வழிநாகப்பட்டிணம் நாகப்பட்டினம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 611108 இவ்வாலயம் தினந்தோறும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
புராண வரலாறு: புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு தான் செய்த ஒரு சிறு பிழையின் காரணமாக சாபம் பெற்று இத்தலத்திற்கு வந்தது. தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் லிங்கத் திருமேனியான இறைவன் வெண்ணைப் பிராண் என்றும், நவநீத நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கோவிலின் அமைப்பு: கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. இராஜகோபுரத்திறகு முன்னால் இரும்புத் தூண்கள் தாங்கும் ஒரு பெரிய கல்யாண மண்டபம் இருக்கிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபானியும் காட்சி தருகின்றனர். இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சினாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம். மேலே சென்று மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது. இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது. உள்ளே வெண்ணைப் பிராண் இருக்கும் கருவறை உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
கோவிலின் சிறப்பு:
1. ஒருமுறை, பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல்.
2. திலோத்தமையைக் கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் சிக்கல்
3. முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொண்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.
4. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
Top