தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | நாகைக் காரோணம் (நாகப்பட்டிணம்) |
இறைவன் பெயர் | காயாரோகனேசுவரர், ஆதிபுரானேஸ்வரர் |
இறைவி பெயர் | நீலாயதாட்சி, கருந்தடங்கன்னி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 4 திருஞானசம்பந்தர் - 2 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | நாகப்பட்டினம் நகரில் இத்தலம் அமைந்துள்ளது. காயாரோகனேசுவரர் ஆலயத்தில் இருந்து அருகிலேயே 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகை சௌரிராஜப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அஞ்சல் நாகப்பட்டினம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 611001 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்கள் பட்டிணம் என்ற பெயரால் வழங்கப் பெறும். நாகர்கள் என்ற ஒரு வகுப்பினர் இந்த இடத்தில் குடியேறி வாழ்ந்து வந்ததால் இவ்வூர் நாகப்பட்டிணம் என்று பெயர் பெற்றது. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் என்ற நாகம் பூசித்த தலம் ஆதலால் இப்பெயர் பெற்றது என்று தலபுராணம் கூறுகிறது. சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான இத்தலம் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலும், அதையடுத்து ஒரு 3 நிலை கோபுரமும், இரண்டு பிராகாரங்களுடன் கூடிய மிகப் பெரிய ஆலயமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அம்பாள் நீலாயதாட்சி அருளாட்சி செய்கிறாள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்ற வரிசையில் இத்தலத்து அம்பிகை நாகை நீலாயதாட்சி என்று வழங்கப் பெறுகிறாள்.
இறைவன் அளித்த அதே உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்த புண்டரீக முனிவரின் பக்தியில் உள்ளம் உருகி முனிவரை அதே உடலோடு (காயம்) ஆரோகணம் செய்து முக்தி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் காயாரோகனேசுவரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இங்குள்ள சிவலிங்கம் புண்டரீக முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரின் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது.
அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும். மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார்.
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் முதல் தடவை பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.
நாகாபரண பிள்ளையார் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்; பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே. திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிள்ளையாராக இருக்கிறார். இத்தலத்திலுள்ள சனி பகவான் தசரத சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தலம் சனி பகவானுக்கு உகந்த தலம். தசரத மன்னனுக்கு சனி பகவான் தான் என்றும் இத்தலத்தில் நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விவரிக்கிறது. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் தீர்த்தங்களாக கோவிலுக்கு மேற்கில் புண்டரீக தீர்த்தமும், முத்தி மண்டபம் அருகில் தேவ தீர்த்தமும் உள்ளன.
திருப்புகழ் தலம்: இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்பகழில் பாடியுள்ளார். தனி சந்நிதியில் ஒரே கல்லினால் ஆன ஆறுமுகப் பெருமான் 12 கரங்களுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் காட்சி தருகின்றனர். திருப்புகழில் மூன்று பாடல்கள் உள்ளன.
தேவார மூவர் என்று போற்றப்படும் சம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிவஸ்தலங்கள் 44-ல் நாகைக் காரோணம் என்ற இத்தலமும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பதிகம் 2, திருநாவுக்கரசர் பதிகம் 3 மற்றும் சுந்தரர் பதிகம் 1 ஆக மொத்தம் 6 பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன.
Top