தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்கருவிலி கொட்டிட்டை (தற்போது கருவேலி என்றும், சற்குணேஸ்வரபுரம் என்றும் வழங்குகிறது) |
இறைவன் பெயர் | சற்குண நாதேஸ்வரர் |
இறைவி பெயர் | சர்வாங்க சுந்தரி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
எப்படிப் போவது | மயிலாடுதுறை திருவாரூர் சாலை வழியிலுள்ள பூந்தோட்டம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கருவிலிகொட்டிட்டை தலம் உள்ளது. இன்றையநாளில் இவ்வூர் சற்குணேஸ்வரபுரம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மீ. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். திருவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து கிழக்கில் 6 கி.மீ. தொலைவிலும், வடக்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில் கருவேலி (சற்குணேஸ்வரபுரம்) கூந்தலூர் அஞ்சல் எரவாஞ்சேரி S.O. தஞ்சாவூர் மாவட்டம் PIN - 605501 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கோவில் அமைப்பு: ஒரு அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான நடைபாதை உள்ளது. நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.
அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு. "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.
Top