Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநல்லம் (தற்போது கோனேரி ராஜபுரம் என்ற பெயரில் அறியப்படுகிறது)
இறைவன் பெயர்உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர்
இறைவி பெயர்மங்கள நாயகி, அங்கவள நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் கும்பகோணம். கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு உமா மஹேஸ்வரர் திருக்கோயில்
கோனேரிராஜபுரம்
கோனேரிராஜபுரம் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612201

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் விபரம்: முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான் உள்ளனர். மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்தும், அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்குப் பார்த்தும் அமைந்துள்ளன. மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

வெளிப் பிரகாரத்தில் சண்முகர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் இடதுபுறம் உள்ள வழியாகச் சென்றால் தனிக் கோவிலில் அம்பாள் சந்நிதியை அடையலாம். அடுத்துள்ளது வைத்தியநாதர் சந்நிதி. புரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான் இவரே. இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது. அடுத்துள்ளவை யாகசாலை மண்டபம், மகாகணபதி சந்நிதிகள். பிரகார வலம் முடிந்து அடுதுள்ள வாயில் கடந்து உள்மண்டபம் சென்றால் இடதுபுறம் பிரம்மலிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராசசபை, உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பறை, நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், நவக்கிரகங்கள் முதலியவை உள்ளன. சனிபகவான் உருவமும், அருகில் பைரவர், இராகு துர்க்கை, அக்னி ஆகியோர் உருவச்சிலைகளும் உள்ளன. தொழுது வாயிலைக் கடந்தால் முலவர் தரிசனம் கிடைக்கும். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி காணப்படும் லிங்கோத்பவர், அவரின் இரு பக்கமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருப்பது பார்த்து ரசிக்கத் தக்கது.

Tirunallam Natarajar

பிரசித்தி பெற்ற திருநல்லம் நடராஜர்

இக்கோவிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் அங்கவள நாயகியின் சந்நிதியைத் தவிர இக்கோவிலில் உள்ள கல்யாணசுந்தரர் கல்யாண கோலத்துடனும், ஸ்ரீமகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடனும் எருந்தருளியுள்ளார். இத்தலத்தில் நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. அவர் உடம்பில் மருவு, ரேகை, தழும்பு போன்றவைகளைக் காண்பது ஒரு அதிசயம். பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள்.


செம்பியன் மாதேவி இறைவனை வழிபடும் சிற்பம்

ஜாதகத்தில் திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரரையும், நடராஜரையும் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும். இங்குள்ள வைத்தீஸ்வரசுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பலவகையான நோய்களிலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

Top
உமா மஹேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
முகப்பு வாயில்
கோஷ்டத்தில் லிங்கோத்பவர்,
பிரம்மா, மகாவிஷ்ணு
சுவாமி சந்நிதி விமானம்
வள்ளி தெய்வானையுடன் முருகர்
கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர்
கோஷ்டத்தில் பிச்சாடனர்
அம்பாள் சந்நிதிக்குச் செல்லும் வழி
கருவறை கோஷ்ட மூர்த்தங்கள்
கருவறை கோஷ்ட மூர்த்தங்கள்
சனீஸ்வரர், பைரவர், இராகு துர்க்கை, அக்னி