நோய்கள் தீர்த்து, ஆயுள் நீட்டிக்கும் மேகநாத சுவாமி கோவில், திருமீயச்சூர்
மேலும் படிக்க ...தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருமீயச்சூர் |
இறைவன் பெயர் | மேகநாதசுவாமி, முயற்சி நாதேஸ்வரர், திருமேனிநாதர் |
இறைவி பெயர் | லலிதாம்பிகை, சௌந்தரநாயகி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. முயற்சி நாதேஸ்வரர் (மேகநாதர்) கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு மேகநாதர் திருக்கோயில் திருமீயச்சூர் திருமீயச்சூர் அஞ்சல் வழி பேரளம் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 609405 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கோவில் அமைப்பு : தமிழகத்தில் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஆக இரண்டு கோயில்கள் இத்திருக் கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு. சோழர்காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள "கஜப்ரஷ்ட விமானம்" மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.
திருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாதர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள ஏகப்பட்ட மண்டபங்களும் துவார பாலகர்களாகச் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும் கல் தூண்களும் சோழர்காலச் சிற்பக் கலை அழகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. கோயிலின் உட்பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது. இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
தலத்தின் சிறப்பு: சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப் போன சூரியன் சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி இக்கூக் குரலால் தம்முடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்கச் சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட 'வசினீ' என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் லலிதா சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றது. இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறெந்தக் கோயிலிலும் காண்பது அரிது. இந்த சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதைப் போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இது.
ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 21ந்தேதி முதல் 27ந்தேதி வரை உதய காலத்தில் சூரியன் மூலவர் மேகநாதரைச் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகின்றது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுவதை இன்றளவும் காணலாம். இங்குள்ள லிங்கத்தை எமன் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டுப் பல நன்மைகள் அடைந்தான். எனவே தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள இறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் எமன் அருள் பெற்று, பிணி நீங்கி நலம்பெறுவர் என்று நம்பப்படுகிறது.
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
Top