தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருதருமபுரம் |
இறைவன் பெயர் | யாழ்முறிநாதர், தர்மபுரீஸ்வரர் |
இறைவி பெயர் | மதுர மின்னம்மை, தேனமிர்தவல்லி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | இத்தலம் காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன் இடதுபுறம் காணப்படும் மாதா கோவில் அருகில் திரும்பிச் சென்று (பாதையில் சாலை பிரியுமிடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது), பின் வலதுபுறமாகச் சென்று இத்தலத்தை அடையலாம். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. திருதெளிச்சேரி என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் காரைக்கால் நகரில் கோயில்பத்து என்ற இடத்திலுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலம் திருநள்ளாறும் இங்கிருந்து அருகிலுள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில் தருமபுரம் காரைக்கால் அஞ்சல் புதுச்சேரி மாவட்டம் PIN - 609602 இவ்வாலயம் நினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரம் சிவன் கோவிலுக்குச் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறு பெற்றமையினால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவர். திருஞானசம்பந்தரின் யாழ்முரிப்பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமான இவ்விடத்திற்கு ஒருமுறை சம்பந்தர் வருகை தந்தார். அவருடன் சம்பந்தர் பதிகங்களை யாழில் பாடிவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்திருந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது, பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிப்பதனால் தான் திருஞானசம்பந்தர் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்று கூறினர். அதைக் கேட்ட பாணர் வருந்தி திருஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். திருஞானசம்பந்தரும் "மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்" என்று தொடங்கும் பதிகம் பாடினார். திருஞான சம்பந்தரின் இசை திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமல் போக பாணர் யாழையும் உடைக்கச் சென்றார். திருஞானசம்பந்தர் தடுத்து, பாணரை இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார். இறைவனும் யாழ்முறிநாதர் என்று பெயர் பெற்றார்.
சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பது போலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.
கோவில் அமைப்பு: தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ஒரு 5 நிலை இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. அடுத்துள்ள 3 நிலை கோபுரத்திற்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் இருக்கின்றன. 2-ம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் மதுர மின்னம்மை சந்நிதி உள்ளது. வெளிப் பிரகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது. 2-ம் கோபுர வாயிலுக்கு நேரே 16 கால் மண்டபத்தை அடுத்து கருவறையில் இறைவன் யாழ்முரிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி அழகாக தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தணகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. தட்சிணாமூர்த்தி இருபுறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க முயலகன் மீது காலை ஊன்றியபடி எழுந்தருளியுள்ளார். லிங்கோத்பவர் இருபுறமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருக்க காட்சி தருகிறார்.தெற்குப் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேதாதெட்சிணாமூர்த்தி திருவுருவம் தரிசிக்க வேண்டிய ஒன்று. அதே போல உற்சவ மூர்த்திகளுள் ஸ்ரீயாழ்மூரிநாதரின் திருவுருவமும் பார்த்து மகிழ வேண்டிய ஒன்றாகும்.
இத்தலத்தின் தீர்த்தமாக விஷ்ணு தீர்த்தம், பிரமதீர்த்தம், தருமதீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் வடபுறமும் மற்றும் முன்புறம் அமைந்துள்ளன. தலமரமாக வாழை உள்ளது.
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இதுவே யாழிசையில் அடங்காமல் போன பதிகமாகும்.
Top