Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருதெளிச்சேரி (தற்போது கோயில்பத்து என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பார்வதீஸ்வரர்
இறைவி பெயர்ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி, சக்திநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக இருக்கிறது. கோவில் உள்ள பகுதி கோயில்பத்து என்று வழங்குகிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்கால்.
ஆலய முகவரிஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில்
கோயில்பத்து
காரைக்கால் அஞ்சல்
புதுச்சேரி மாநிலம்
PIN - 609602

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு: முன்னால் ஒரு நுழைவாயிலும், அதனையடுத்து ஐந்து நிலைகள் கொண்ட மேற்கு நோக்கிய பெரிய ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்தில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள முன் மண்டபத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், அதன் அருகே கொடிமர விநாயகர் காணலாம். கருவறை முக மண்டபத்தில் அம்பாள் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகியர் காணப்படுகின்றனர். இறைவன் பார்வதீஸ்வரர் கருவறையில் லிங்க உருவில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர், இறைவனை நோக்கி நந்தியெம் பெருமான் ஆகியோரும் உள்ளனர். கருவறைச் சுற்றில் 63 மூவர், நர்த்தன கணபதி, சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் உள்ளனர். கருவறை கிழக்குச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளது. கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, ஆகியோரைக் காணலாம், சனீஸ்வரனுக்கு தனி சந்நிதி இங்குள்ளது குறிப்பிடத் தக்கது.

இத்தலத்தில் சூரியபுஷ்கரணி, குகதீர்த்தம், தவத்தீர்த்தம் ஆகய மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் சூரியனால் உண்டாக்கப்பட்ட சூரிய புஷ்கரணி சிறந்ததாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் வைகறையில் இத் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. பங்குனி மாதத்தில் 13-ம் தேதி முதல் 7 நாட்கள் சூரியபூசை நிகழ்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

புத்தரை வாதில் வென்றது: இத்தலத்திற்கு அருகாமையில் போதிமங்கை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில், புத்தர்கள் அதிகமாக வசித்து வந்தனர். திருத்தெளிச்சேரியை தரிசித்த பின் போதிமங்கை வழியாக ஞானசம்பந்தரது அடியார் திருக்கூட்டம் ஞானசம்பந்தர் புகழைப் பாடியவாறு சென்றது. அதைப் பொறுக்காத புத்தர்கள் தடுத்தனர். அப்பொழுது தேவாரத் திருமுறை எழுதும் சம்பந்தரின் அடியார், சம்பந்தரின் பஞ்சாட்சரப் பதிகத்திலிருந்து


புத்தர் சமண் கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு  அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.

பொழிப்புரை :

புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை 
மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் 
ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய 
திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை 
எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.

என்ற பாடலைப் பாட புத்தர்கள் தலைவனான புத்தநந்தி தலையில் இடி விழுந்தது. உடனே அவன் இறந்து போனான். மீளவும் புத்தர்கள் சாரி புத்தனைத் தலைவனாகக் கொண்டு வாது செய்ய வந்தனர். தேவாரத் திருமுறை எழுதும் சம்பந்தரின் அடியார் ஞானசம்பந்தர் முன்னிலையில் அவர்களை வாதில் வென்றார். புத்தர்கள் தங்கள் பிழை உணர்ந்து ஞானசம்பந்தரை வணங்கி சைவர் ஆனார்கள்.

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல பதிகத்தை தினமும் ஓதுவோர் வானவர்கள் சூழ வாழ்ந்திருப்பர் என்று பதிகத்தின் படைசி பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.


திக்கு லாம்பொழில் சூழ் தெளிச்சேரி என் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ விருப்பவர் சொல்லிலே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் பொழில் சூழ்ந்து விளங்கும் திருத்தெளிச்சேரியில் உறையும் எம் 
செல்வன் மீது புகழ்மிக்க காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய தக்க 
பாடல்கள் பத்தையும் வேதமுறைப்படி ஓத வல்லவர்கள் அடையும் பயனைக் கூறின், 
பெரிய முடிகளைச் சூடிய வானவர்கள் சூழ அவர்கள் இருப்பர் எனலாம்.
Top
பார்வதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜகோபுரம்
கொடி மரம், விநாயகர்
ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி சந்நிதி
பார்வதீஸ்வரர் சந்நிதி
வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதி
சனீஸ்வரன் சந்நிதி
வெளிப் பிரகாரம்
63 நாயன்மார்கள்