தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருநாகேஸ்வரம் |
இறைவன் பெயர் | சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர் |
இறைவி பெயர் | கிரிகுசாம்பிகை, பிறையணிவாள் நுதல் அம்மை |
பதிகம் | திருநாவுக்கரசர் - 3 திருஞானசம்பந்தர் - 2 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது. |
ஆலய முகவரி |
செயல் அலுவலர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் திருநாகேஸ்வரம் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612204 தொலைபேசி: 0435 2463354 ஆலயம் தினந்தோறும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும். |
பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். இத்தலமும் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாககன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது.
ராகு கேது தோஷம் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும். திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.
ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மஹாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மஹிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
கோவில் அமைப்பு: ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர் ஏறபட்டது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.
அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.
இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.
கிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச் செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம் கொண்ட சக்தி அர்த்தநாரீஸவரர் ஆக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள். எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை. தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பின்பு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும், கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி பூலோகத்தில் செணபகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸ்வரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.
பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும். ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார். நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பிரதி ஞாயிறுதோறும் மாலை ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. ராகுவைப் போலக் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப்போல் கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி.
காலையில் குடந்தைக் கீழ்கோட்டத்து இறைவனையும், நண்பகலில் திருநாகேஸ்வரம் இறைவனையும், மாலையில் திருப்பாம்பரம் இறைவனையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.
Top