தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்குடந்தைக் காரோணம் |
இறைவன் பெயர் | காசி விஸ்வநாதர், சோமேசர் |
இறைவி பெயர் | விசாலாட்சி, தேனார்மொழியாள் |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணம் நகரில் மகாமகக் குளத்தின் வடகரையில் இத்தலம் அமைந்திருக்கிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மகாமக குளத்தின் அருகில் கும்பகோணம் கும்பகோணம் அஞ்சல் தஞ்சை மாவட்டம் PIN - 612001 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கும்பகோணத்தில் மகாமக குளத்தின் வடகரையிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலே திருக்குடந்தைக் காரோணம் என்று அறியப்படும் பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று சிலர் சொல்கின்றனர். இத்தலத்தில் இராமபிரான், இராவணனைக் கொல்ல ருத்ராம்சம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் (காய - ஆரோகணம்) காரோணம் என்று பெயர் பெற்றது. மற்றும் சிலர் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ள சோமேசர் கோவில் தான் திருக்குடந்தைக் காரோணம் என்று அறியப்படும் பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று கூறுகின்றனர். மகாபிரளய காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்ட தலமாதலால் காரோணம் என்றும், இந்த சோமேசர் கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதலின் காரோணம் என்றாயிற்று. மேலும் இத்தல பதிகத்தின் 7-வது பாடலில் சோமேசர் கோவிலின் இறைவி தேனார்மொழியாள் பெயரை சம்பந்தர் குறிப்பிட்டுள்ளதால் இத்தலமே பாடல் பெற்ற தலம் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த இரு கோவில்களில் உள்ள சிவாச்சாரியார்களும் தங்களுடைய கோவிலே பாடல் பெற்ற தலம் என்று அழைக்கின்றனர்.
காசி விஸ்வநாதர் கோவில்: நவகன்னியர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமை இத்தலத்திற்குள்ளது. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவகன்னியர்களுக்கு நெடுங்காலமாக ஒரு குறை. மக்கள் நீராடி தங்கள் பாவங்களை தங்கள் மீது கழுவிச் செல்கிறார்கள். அப்படிச் சேர்ந்த பாவங்களை நாங்கள் சுமக்க வேண்டுமா என்று ஈசனிடம் அவர்கள் முறையிட்டனர். ஈசன் நவகன்னியர்களையும் அழைத்துக் கொண்டு வந்து கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தீரும் என்றருளினார். ஈசனும் மகாமகக் குளத்தின் வடகரையில் எழுந்தருளினார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்ற பெயர்களுடன் இறைவன், இறைவி எழுந்தருளியிருக்கும் இக்கோவிலே குடந்தைக் காரோணம் என்று பலரால் கூறப்படுகிறது.
ஆலயத்தின் 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன்னாலுள்ள நுழைவாயில் முகப்பின் மேலே நவகன்னியர்களை மகாமக தீர்த்தத்தில் நீராட ஈசன் அழைத்துச் செல்லும் சுதைச் சிற்பங்களைக் காணலாம். 5 நிலை கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமர விநாயகரையும், கொடிமரத்தியும் காணலாம். அடுத்துள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியெம் பெருமானும் உள்ளனர். அடுத்த பிரகாரத்தில் நவகன்னியரும் சிலை வடிவில் இவ்வாலயத்தில் காட்சி அளிக்கின்றனர். சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது. இராமர் இலங்கைக்குச் செல்லுமுன இத்தலத்திற்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். இராமர் வழிபட்ட ஷேத்திர மகாலிங்கத்தை இவ்வாலயத்தின் வடகிழக்கு மூலையில் நாம் காணலாம். உயர்ந்த பாணத்துடன் இவர் காட்சி அளிக்கிறார். இந்த மகாலிங்கம் வளர்ந்து வருவதாக ஐதீகம்.
ஆலயத்தில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உண்டு. கோஷ்டத்தில் தனி சந்நிதியில் அருள்தரும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
சோமேசர் கோவில்: உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார். சிவபெருமான் குடத்தின் மீது அம்பைச் செலுத்திய போது அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இவ்வாலயத்திலுள்ள இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இக்கோயிலுக்கு மூன்று வாயில்களும் ஒரு பிரகாரமும் உள்ளது. கிழக்கிலுள்ள இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். மகாவிஷ்ணு வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்துள்ள கட்டைகோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம். வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். ஆக எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம்.
திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் 7-வது பாடலில் தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கிற் கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே என்று சோமேஸ்வரர் ஆலயத்திலுள்ள இறைவி தேனார்மொழி அம்பிகையைக் குறிப்பிடுவதால், இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
Top