தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருமழபாடி (அரியலூர் மாவட்டம்) |
இறைவன் பெயர் | வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர்வைத்தியநாதசுவாமி, வச்சிரதம்பேஸ்வரர் |
இறைவி பெயர் | அழகம்மை |
பதிகம் | திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 3 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது. அரியலூர் - திருவையாறு சாலையில் கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றும் மழபாடி வரலாம். |
ஆலய முகவரி | அருள்மிகு வச்சிரதம்பேஸ்வரர் திருக்கோவில் திருமழபாடி அஞ்சல் அரியலூர் வட்டம் அரியலூர் மாவட்டம் PIN - 621851 |
திருவையாறில் இருந்து திருமழபாடி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
இந்த திருக்கோயிலில் உள்ள சிவனுக்கு பெயர் வச்சிரதம்பேஸ்வரர், அம்மனின் பெயர் அழகம்மை. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.
இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம். இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார்.
இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.
நந்தி கல்யாணம்: இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழப்பாடி திருத்தலத்தில் பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம் தோறும் தடைபெறுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு தடைபெறும் திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.
கொள்ளிட நதி இத்தலத்தில் வடக்கு முகமாக உத்தரவாஹினியாக ஓடுவது இத்தலத்தின் சிறப்பம்சம்.
சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது திருவாலம்பொழிலில் எழுந்தருளியிருந்தார். அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார்.
Top