தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

ஆடகேச்சுரம் - ஆடகேச்சுவரர் திருக்கோவில், வைப்புத் தலம்

சிவஸ்தலம்

ஆடகேச்சுரம் (திருவாரூர்த் திருக்கோவிலுக்குள் "நாகபிலம்" என வழங்கும் ஆலயம்)

இறைவன்

ஆடகேச்சுவரர்

இறைவி

அம்பாள் சந்நிதி இல்லை

பதிகம்

அப்பர் (6-71-8)

எப்படிப் போவது

திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குள் உள்ள ஒரு தனிக் கோயில் ஆடகேச்சுரம். திருவாரூர்த் திருக்கோவிலுக்குள் தெற்குப் பிராகாரத்தில் "நாகபிலம்" என வழங்கும் ஆலயமே ஆடகேச்சுரம் என்பர்.

சிறப்புக் குறிப்பு

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள திண்டீச்சரம், நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

பதிகம் குறிப்பு
பதிகப் பாடல் (6-71-8)

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மா காளேச்
சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.
பொழிப்புரை

கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற்கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.