அக்கீச்சுரம் - அக்னீஸ்வரர் திருக்கோவில், வைப்புத் தலம்
சிவஸ்தலம்
அக்கீச்சுரம் (திருகஞ்சனூர் என்று இந்நாளில் வழங்குகிறது)
இறைவன்
அக்னீஸ்வரர்
இறைவி
கற்பகாம்பாள்
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
முக்கிய குறிப்பு
இத்திருக்கோவில் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற கஞ்சனூர் (NCN036) சிவஸ்தலத்தின் பக்கத்தைப் பார்க்கவும். இந்த வைப்புத் தலம் கஞ்சனூர் சிவஸ்தலத்துடன் தொடர்புடையதாகும்; தல வரலாறு மற்றும் சிறப்புகள் உள்ளிட்ட விரிவான தகவல்கள் கஞ்சனூர் பாடல் பெற்ற தலப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.
எப்படிப் போவது
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.
ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று "கோட்டூர்" "கஞ்சனூர்" என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம்.
கோவிலின் சிறப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ள கஞ்சனூர் திருநாவுக்கரசரது பதிகம் பெற்ற தலமாகும். அக்னிதேவன் அங்கு சிவபெருமானை வழிபட்டான் என்று ஐதீகம். "அனலோன் போற்றுங் காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே" என்று தனது கஞ்சனூர் பதிகத்தின் முதல் பாடலில் அக்னிதேவன் இத்தல இறைவனை வழிபட்டதைக் குறிப்பிடுகிறார் திருநாவுக்கரசர். அக்காரணத்தால் கஞ்சனூர்ச் சிவாலயம் அக்கீச்சுரம் என்று பெயர் பெற்றது. இப்பொழுது அக்கினீசுவரர் கோயில் என வழங்கும் திருக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் திருவக்கீச்சுரம் என்று அதனைக் குறிக்கின்றது. இத்தலம் நவக்கிரக பரிகாரத் தலங்கள் வரிசையில் சுக்கிரன் தலமாக போற்றப்படுகிறது.
பதிகம் குறிப்பு (6-71-8)
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது "ஈச்சுரம்" என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.
நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மா காளேச் 6-71-8
சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.
பொழிப்புரை
கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.