Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கோளிலி (தற்போது திருக்குவளை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்வண்டமர் பூங்குழலி
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் இத்தலம் இருக்கிறது. திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
ஆலய முகவரிஅருள்மிகு கோளிலிநாதர் திருக்கோவில்
திருக்குவளை
திருக்குவளை அஞ்சல்
திருக்குவளை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN 610204

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
tirukuvalai route map

திருவாரூரில் இருந்து திருக்குவளை செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் விபரங்கள் திருக்கோளிலி தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது. பீமன் பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இங்கு இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிராகாரத்திற்கு எதிரே மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகாரவலம் வரும் போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன

இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய aற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரர் மேல் பேரன்பு கொண்டவராய் செந்நெல்லும், பருப்பும் மற்ற பெருட்களும் சுந்தரரும் பரவையாரும் அடியார்களுக்கு அமுது படைப்பதற்காக பல நாட்களாக அனுப்பி வந்தார். அந்நாளில் ஒரு முறை மழை வளம் குன்றி விளைச்சல் இல்லாமல் போக, சுந்தரருக்கு நெல்லும், பருப்பும் அனுப்ப முடியாமல் மிகவும் மனம் வருந்தி சிவபெருமானிடம் முறையிட்டார். இறைவன் அவர் வேண்டுதலை ஏற்று குண்டையூர் முழுவதும் நெல் மலையாக குவித்து வைத்து அருள் புரிந்தார். குண்டையூர் கிழார் அதனைக் கண்டு வியந்து இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று சுந்தரர் வீட்டில் சேர்ப்பது என்று கவலைப்பட்டு சுந்தரரிடம் விபரம் கூறினார். சுந்தரரும் என்ன செய்வது என்று எண்ணி எப்படி இந்த மலை போல் குவிந்திருக்கும் நெல்லை தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டு நீள நினைந்தடி யேனுமை நித்தலும் கைதொழுவேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனும் அன்று இரவே பூதகணங்கள் மூலம் திருவாரூர் தெருக்கள் யாவும் நெல் மலையாக குவித்து வைத்து அருள் புரிந்தார்.

Top
கோளிலிநாதர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் இராஜகோபுரம்
இராஜகோபுர வாயில் நூழைந்தால் உள்ள நீண்ட முன்மண்டபம்
ஆலயத்தின் உள்புறத் தோற்றம்
ஆலயத்தின் 2வது நுழைவாயில்
அருள்மிகு தியாகராஜர் சந்நிதி
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி
கோஷ்டத்தில் உமாமகேஸ்வரர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர்
ஒரே வரிசையில் நவக்கிரகங்கள்
கோஷ்டத்தில் பிச்சாண்டவர், கூத்தாடும் விநாயகர், நடராஜர்