A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

மனத்துனைநாதர் திருக்கோவில், திருவலிவலம்

சிவஸ்தலம்

திருவலிவலம்

இறைவன்

மனத்துனைநாதர், இருதய கமலநாதர்

இறைவி

மாழையொண்கண்ணி

பதிகம்

திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 2, சுந்தரர் - 1

மனத்துனைநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலையில் உள்ளது கீழ்வேளூர் என்று தலம். கீழ்வேளூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ.தொலைவில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள்.

ஆலய முகவரி

அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோவில்
வலிவலம்
வலிவலம் அஞ்சல்
திருக்குவளை வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610207

ஆலய நேரம்

காலை :  6:00 - 12:00

மாலை :  4:00 - 8:30

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – மனத்துனைநாதர் திருக்கோவில், திருவலிவலம்
ஆலயச் சிறப்பும் வரலாறும்
பெயர்க் காரணம்

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது.

கோவில் அமைப்பு

ஒரு முகப்பு வாயில் நம்மை வரவேற்கிறது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையினாலான ரிஷப வாகனத்தில்மேல் அமர்ந்துள்ள சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் ஆகியோரைக் காணலாம். உள்ளே நுழைந்தால் தூண்களுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளது. அதன் பின் உள்ள 3 நிலை கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் மனத்துனைநாதர் சந்நிதியுள்ள கட்டுமலை அமைந்துள்ளது. படிகளேறி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம தெற்கு நோக்கிய அம்பாள் மாழையொண்கண்ணி சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் இருதய கமலநாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எருந்தருளியுள்ளார். பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

தல சிறப்பு

ஆலயத்தைச் சுற்றி 4 புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் “பொழில் சூழ்ந்த வலிவலம்” என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர். இத்தல தீர்த்தம் காரண ரிஷியின் பேரால் காரண கங்கை என்றுரயைக்கப்படுகிறது.

திருப்புகழ் தலம்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

பதிகப் பெருமை
தேவாரம் ஓதத் தொடங்கும் திருப்பாடல்

தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன் தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன்முதலாக ஓதும்

பிடியதனரு உமை கொள மிகுகரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினான் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.

என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பூ இயல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் என்ற பதிகத்தின் 5-வது பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முன்பு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு. அதன்படி கணபதிவர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள்.

சுந்தரர் பதிகச் சிறப்பு

சுந்தரர் தனது பதிகத்தில் 5-வது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடல்களைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்
    கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானைத்
    தொண்டனேன் அறியாமை யறிந்து
கல்லி யல் மனத்தைக் கசிவித்துக்
    கழலடி காட்டி என் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
    வலிவலந்தனில் வந்து கண்டேனே

பதிகம்திருப்புகழ்
மனத்துனைநாதர் ஆலயம் புகைப்படங்கள் (தொடர்ச்சி)