தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்கடிக்குளம் (தற்போது கற்பகநாதர் குளம் என்றும் கற்பகனார் கோவில் என்றும் வழங்கப்படுகிறது) |
இறைவன் பெயர் | கற்பகநாதர் |
இறைவி பெயர் | மங்களநாயகி, சௌந்தரநாயகி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்தலத்திற்கு உள்ளது. திருஇடும்பாவனம் இத்தலத்திலிருந்து மேற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் கற்பகநாதர்குளம் அஞ்சல் குன்னலூர். S.O. திருத்துறைப்பூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 614703 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5-30 மணி மு தல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: சண்முகசுந்தரம், ஆலய அர்ச்சகர், கைபேசி: 9943852180 |
திருத்துறைபூண்டியில் இருந்து திருக்கடிக்குளம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
கோவில் அமைப்பு : கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வடபுறம் விநாயக தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் மாடங்களில் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர். உள்பிராகாரத்தில் நால்வர், தலவிநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, தலமரம் பலா, சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டைகளுடன் எழிலாகக் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். ஆனித்திரு மஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகிறது. கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தின் கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார். இவரின் சந்நிதி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. அருகில் கோதண்டராமர் கோவிலும் உள்ளது.
கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். திருஇடும்பாவனம் தலத்தைப் போன்றே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய திருக்கடிக்குளமும் ஏற்ற தலம். ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்று தலபுரானம் கூறுகிறது.
Top