தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருதலையாலங்காடு |
இறைவன் பெயர் | ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர், ஆடல்வல்லநாதர் |
இறைவி பெயர் | ஸ்ரீபாலாம்பிகை, திருமடந்தை அம்மை |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
எப்படிப் போவது | திருவாரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில் தலையாலங்காடு செம்பங்குடி அஞ்சல் குடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 612603 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். அருகிலேயே அர்ச்சகர் இல்லம் உள்ளதால் எப்போதும் தரிசிக்கலாம். |
செருக்குற்றுத் திரிந்த தாருகாவன முனிவர்கள் இறைவனின் பெருமை உணராது, அவரை அழித்திடத் தீர்மானித்து ஆபிசார வேள்வி நடத்தினர். ஈசனோ அவற்றிலிருந்து புறப்பட்ட புலியைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்து வீர நடனம் புரிந்தார். நாகங்களை ஆபரணமாகச் சூடினார். மானை ஏந்தினார். மழுவைத் தாங்கினார். தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை ஒடுக்கி, இறைவன் ஒருவனே என்பதையும், ஈசனால் மட்டுமே சகல செயல்களும் நடக்கின்றன என்பதையும் உணர்த்தி அருள் புரிந்தார். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகனை அடக்கி அவன் முதுகின் மீது இறைவன் நடனம் புரிந்த தலம் இதுவாகும்.
தேவாரப் பாடல் பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். இவ்வூர் சங்க காலத்தில் "தலையாலங்கானம்" என்று போற்றப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட கடும் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றான். இந்தப் போர் நடந்த இடம் தலையாலங்கானம். எனவே இவனுக்கு தலையானங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதனைப் புறநானூறு விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வளவு மகிமை மிக்க தலத்திலுள்ள இந்த ஆலயம் ஆரவாரமின்றி ஆனந்தச் சூழலில் அமைதியாக அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு : உயர்ந்த ராஜகோபுரமோ ஓங்கிய மதில்களோ இல்லாமல் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்பு, தலத்தின் திருக்குளமான சங்கு தீர்த்தம் உள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள் சென்றால் முதலில் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சந்நிதிக்குள் ஸ்ரீபாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணை புரிகிறாள். திரு மடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேஸ்வரி சந்நிதியும் இங்குண்டு. சந்நிதிக்கு வெளியே சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நந்தி தேவர் தனி மண்டபத்துள் அமர்ந்துள்ளார். பின் திறந்தவெளியில் நீண்ட பாதை. அது சுவாமி சந்நிதியைச் சென்றடைகிறது. செங்கற்களால் ஆன ஸ்வாமி சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது. நீண்ட பாணம் கொண்டு சதுர ஆவுடையார் மீது அற்புதமாய் தரிசனம் தருகின்றார் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர். ஆடல்வல்லநாதர் என்பது இவரது தமிழ்ப் பெயராகும்.
இவரது தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில், வடக்கே தல விருட்சமான பலா மரத்தைக் கண்டு வணங்கலாம். தனியே ஒரு லிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதியும் இங்கே உள்ளது. ஸ்வாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரஸ்வதியின் சிலை உள்ளது. வீணையில்லா சரஸ்வதியை இங்கே காணலாம். சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்க தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளார். பங்குனி 30, 31 மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் ஸ்வாமிமீது விழுகின்றன.
இத்தல தீர்த்தக் குளமான சங்கு தீர்த்தம் மிக சிறப்புடையது. இத்தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் நீராடி, இறைவன், இறைவி முன்பு நெய் தீபமேற்றி வழிபட, சகல வியாதிகளும் தீரும். வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களும் மறைவது கண்கூடு. முன்னோர்களது சாபங்கள் அகலும். இத்தல பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபட எதிரி நாசமடைவர். இத்தல ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து வழிபட, தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நடைபெறும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். பிள்ளைப் பேறு கிட்டும். இறைவன் நடனமாடிய அரிய தலங்களுள் இதுவும் ஒன்றென்பதால், நடனப் பயிற்சியாளர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமாகும்.
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் இத்திருத்தலத்தினை கால்களால் மிதிப்பதைப் பாவமாகக் கருதி, கரங்களால் ஊன்றி வந்து வழிபட்டு பதிகம் பாடித் துதித்துள்ளார். இறைவன் தை அமாவாசை தினத்தில், ஆலயத்தின் வடபிராகாரத்தில் உள்ள பலா மரத்தடியில் அப்பருக்குக் காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார். அப்பர் இத்தலம் மீது பத்து பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளது மட்டுமின்றி பிற திருத்தலப் பதிகங்களிலும் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். திருநாவுக்கரசர் இத்தல பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தலையாலங்காடு இறைவனை அடையாமல் வீணாய் நாட்களைப் போக்கினேனே என்று மனம் உருகிப் பாடியுள்ளார்.
Top