அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில், திருப்பெருவேளூர்
சிவஸ்தலம்
திருப்பெருவேளூர் (தற்போது மணக்கால் ஐயம்பேட்டை என்று வழங்கப்படுகிறது)
இறைவன்
அபிமுக்தீஸ்வரர், பிரியாதநாதர், பிரியாஈஸ்வரர்
இறைவி
ஏலவார்குழலி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
அபிமுக்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை, வடகண்டம் ஊர்களைத் தாண்டி மணக்கால் அய்யம்பேட்டை என்ற இடத்தில் இறங்கி 1/2 கி.மி சென்றால் இத்தலம் அடையலாம். தலையாலங்காடு என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
மணக்கால் ஐயம்பேட்டை
மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610104
ஆலய நேரம்
காலை : 9:00 - 11:00
மாலை : 5:30 - 8:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
ஆலயச் சிறப்பும் வரலாறும்
கோவில் அமைப்பு
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது பிரதான விநாயகர் சந்நிதி, அதையடுத்து வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நிதி, அடுத்து யோகசண்டிகேஸ்வரர் சந்நிதி ஆகியவை உள்ளன. கிழக்கு வெளிப் பிராகாரத்தில் இடதுபுறம் மாடக்கோவிலுக்குச் செல்லும் படிகள் உள்ளன. மாடக் கோவிலில் உள்ளே இடதுபக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நேர் எதிரில் சாளரம் வைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மிருகண்டு மகரிஷி, துர்க்கை முதலியோர் உள்ளனர். துர்க்கைச் சந்நிதி தனிச் சந்நிதியாகவுள்ளது. சண்டேசுவரர் உருவம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சந்நிதிகள்
வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியை அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் தனி சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். மேலும் இந்த வெளிப் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு லிங்கம் சரஸ்வதீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகிறது. முன்பு ஒரு முறை ஊமைச்சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்கு பேசும் சக்தியை தந்தார் என கோயில் வரலாறு கூறுகிறது.
இத்தல விநாயகர் கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்கள். கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
தல வரலாறு
தேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. பெருமாள் இங்கு தனி சன்னதியில் வைகுந்த நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் பல உள்ளன. அவற்றில் பெருவேளூர் தலமும் ஒன்றாகும். முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் பெருவேளூர் எனப்பட்டது.
பதிகம்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
அபிமுக்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்