Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவாரூர் அரநெறி
இறைவன் பெயர்அரநெறியப்பர், அசலேசுவரர்
இறைவி பெயர்வண்டார்குழலி
பதிகம்திருநாவுக்கரசர் - 2
எப்படிப் போவது திருவாரூரில் உள்ள வன்மீகிநாதர் ஆலயத்தின் உள்ளே இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு அசலேசுவரர் திருக்கோயில்
தியாகராஜசுவாமி திருக்கோயில் தேவஸ்தானம்
திருவாரூர்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவாரூர் அரநெறி என்னும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே இரண்டாம் பிராகாரத்தில் தென் கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது. இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அரநெறியப்பர், அசலேசுவரர் என்ற பெயர்களுடன் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானின் - அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தான கோபுரத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுவதில்லை என்ற தனி மகிமை வாய்ந்தது. ஆறு மாதத்திற்குள் இறப்பவர் நோக்கினால் அந்த நிழலும் தெரியாது என்பது மற்றொரு சிறப்பு. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. அரநெறியப்பர் கோயிலை செம்பியன் மாதேவியார் கருங்கல்லால் கட்டி, இரு திருமேனிகளை எழுந்தருளுவித்ததோடு நாடோறும் பூஜைக்கும் கோயிலைப் பழுது பார்ப்பதற்கும் ஆக 234 காசுகளைக் கொடுத்ததையும் இத்தலத்திலுள்ள கலவெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால் அசலேசர் எனப் பெயர் பெற்றார். அசலேஸ்வரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தி அடிகள் இக்கோவிலில் சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். திருவாரூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவரூபமாக கருதியவர் இவர். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்த நமிநந்தி அடிகள், கோயில் விளக்குகளில் உள்ள நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டு விளக்கின் ஒளி மங்க்த் தொடங்கியது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும், விளக்கும் அதற்குள் அணைந்துவிடும் என்று நினைத்த நமியந்தி அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று விளக்கிற்காக சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட விட்டில் சமணர்கள் வாழ்ந்து வந்தனர். "கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக தேவையில்லை, அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்று" என்று சமணர்கள் பரிகாசம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து இறைவனிடம் மனமுருகி வேண்ட இறைவன் அசரீரியாக "அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று"' என்று கூறினார். இதைக்கேட்ட நமிநந்தி அடிகள் மிகுந்த சந்தோஷத்துடன் சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். சிவபெருமானின் அருளால் தண்ணீரால் கோவில் விளக்கெல்லாம் எரியச் செய்து, சமணர்களின் கொட்டத்தை அடக்கி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

Top
அரநெறியப்பர் ஆலயம் புகைப்படங்கள்
அசலேசுவரர் சந்நிதி முன் நந்தி, பலிபீடம், கொடிமரம்
அசலேசுவரர் சந்நிதி கருவறை கோபுரம்
கருவறை கோபுரம் - மற்றொரு தோற்றம்
அசலேசுவரர் ஆலயம் வெளித் தோற்றம்
அசலேசுவரர் ஆலயம் மற்றொரு தோற்றம்
பலிபீடம்
அசலேசுவரர் சந்நிதி நுழைவாயில்