Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்சிவபுரம்
இறைவன் பெயர்சிவபுரநாதர், பிரம்மபுரி நாதர்
இறைவி பெயர்சிங்காரவல்லி, பெரியநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 3
எப்படிப் போவது கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
சிவபுரம்
சாக்கோட்டை அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612401

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
sivapuram route map

கும்பகோணத்தில் இருந்து சிவபுரம் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Yahoo Maps

"சிவபுரம்" என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும். கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜ கோபுரத்தையும், 2 பிரகாரங்களை உடையதாகவும் அமைந்துள்ளது. இராஜ கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள இரண்டாவது பிரகாரத்தில் கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் காணலாம். இந்த பிரகாரத்தின் வலதுபுறம் பைரவர் சந்நிதி தெற்கு நோக்கி மைந்துள்ளது. 3 நிலை உள்ள 2-வது கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் முதல் பிரகாரம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. எதிரே முன் மண்டபம், அதன் பின் இறைவன் கருவறையில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மூலவர் கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி, இவர் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவர். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது. கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண் பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் "பாரவன்காண்" என்று தொடங்கும் பாடலில் "பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்" என்று பாடியுள்ளார். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டது. பின்பு அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெரு முயற்சியால் திரும்பக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்புக் கருதி, இப்போது திருவாரூர்ச் சிவாலயத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராசத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபட்டு வரப்பெறுகின்றது. நடராசப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் சந்நிதியில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.

வெளிப் பிரகாரத்தில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு காலைசந்தி, அர்த்தசாமம் ஆகிய காலத்தில் அபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி, தயிர்சாதமும் கடலையுருண்டையும் நிவேதித்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால், வழக்குகளில் வெற்றி, தீராத நோய் தீரும் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இத்தலத்தில் கார்த்திகை மாதம் கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒரு முறை நந்தியெம்பெருமானின் சாபத்திற்கு உள்ளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்..

திருப்புகழ் தலம்: இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

இத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். ஆகையால் இத்தலத்தைக் காலால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் அங்கப் பிரதட்சினம் செய்து இறைவனை வழிபட்டார். பின்பு ஊர் எல்லையைத் தாண்டிச் சென்று அங்கிருந்தபடி இத்தல இறைவனை பதிகம் பாடி வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்


திருமால் வெண் பன்றியாக இருந்து சிவனை வழிபடும் சிற்பம்
Top
சிவபுரநாதர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜ கோபுரம்
3 நிலை 2-வது கோபுரம்
கருவறை கோஷ்டத்தில் விநாயகர்
கருவறை கோஷ்டத்தில் மகாவிஷ்ணு
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
பைரவர் சந்நிதி
பைரவர்
பிராகாரத்தில் சிலா உருவங்கள்