செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் - சூட்சுமபுரீஸ்வரர் கோவில், சிறுகுடி
மேலும் படிக்க ...தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | சிறுகுடி |
இறைவன் பெயர் | சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர் |
இறைவி பெயர் | மங்களநாயகி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி சுமார் 3 கி.மீ. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது. திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்திறகு வர சாலை வசதி உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகுடி சரபோஜிராஜபுரம் அஞ்சல் வழி பூந்தோட்டம் குடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 609503 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும். |
தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்திற்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்திற்கு சூட்சுமபுரி என்றும் இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர் என்றும அழைக்கப்படுகிறார்.
கோவில் அமைப்பு: மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர் என்று ஆலய குருக்கள் கூறினார். இதற்கு மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று. நவக்கிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் அழகாக தோற்றமளிக்கிறார்.
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அம்பாளுக்குத் தான் அபிஷேகம் தடைபெறுகிறது.
முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் சுயம்புத் திருமேனி. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவேயுள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர். லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவையும், வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரையும் காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுற்றில் மங்கள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.
உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு இறைவன் காட்சி தரும் அழகு பார்க்க வேண்டியதாகும். இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. செவ்வாய் தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய் வழிபாடு விசேஷமானது. ஆலயத்திற்கு வெளியே நேரே எதிரிலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். வேற்று மதத்தினர்கள் கூட இங்கு வந்து வழிபடுவதைப் பார்க்கலாம்.
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார். தனது பதிகத்தின் 11-வது பாடலில் "தேன் வண்டுகள் விரும்பும் பொழில் சூழ்ந்த சிறுகுடி "என்று பாடியுள்ளார். அந்தக் கூற்றை மெய்ப்பிப்பது போன்று இன்றும் இவ்வாலயத்தின் மண்டபத்தில் ஒரு ஜன்னலில் தேன்கூடு இருப்பதைப் பார்க்கலாம்.
Top